வெள்ளவத்தை மயூரபதி வீதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் (5) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற இம்மோதல் முடிவடைந்தது. இதனால் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகளும் ஏழு சிவிலியன்களும் காயமடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
மயூரா வீதியில் லக்முத்து செவன தொடர்மாடிக் குடியிருப்பிலுள்ளவர்களுக்கும் அருகில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையில் இடம் பெற்ற வாய்த்தர்க்கமே இறுதியில் மோதலாக மாறியதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
மோதலில் ஈடுபட்ட இரண்டு குழுக்களும் கடும் குடிபோதையில் இருந்ததாக சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர், தொலைபேசி விவகாரமொன்றும் இப்பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாகவும் கூறினார்.
இரு குழுக்களையும் சேர்ந்த சுமார் 150 இற்கும் அதிகமானோர் வீதியில் இறங்கி மோதலில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெள்ளவத்தை பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதுடன் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இம்மோதலில், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 07 முச்சக்கர வண்டிகள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் என்பன சேதமாகியுள்ளன.
சம்பவத்தை தொடர்ந்து அன்றையதினம் இரவே ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். மேலும் சீ.சீ.டீ.வி ஒளிப்பதிவைக் கொண்டு மோதலுக்கு காரணமான மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
காயமடைந்த சிவிலியன்களும் பொலிஸாரும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸார் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருடன் இணைந்து இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment