சிங்களவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டால், அவருக்கு கட்சி பேதம் பாராது ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
வெயாங்கொட, பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஒரு விகாரையினால், ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால், 70 இலட்சம் வாக்குகளை இலகுவாக ஒருவருக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
இதனை எம்மால் செய்ய முடியாதா? சிங்களத் தலைவர் ஒருவரை நாம் நாட்டில் தலைவராக இலகுவாக கொண்டுவர முடியும். எமக்கு கட்சியோ, நிறமோ என்றும் முக்கியமில்லை.
ஆனால், நாட்டில் தலைவராக வருபவர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் முஸ்லிம் அடிப்படைவாததத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவது உள்ளிட்ட உறுதிமொழிகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.
ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு கல்விக் கொள்கையின் கீழ் இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டும். ஒரு நிறைவேற்றுத் தலைவரின் கீழ் ஆட்சி வரவேண்டும். இவ்வாறான உறுதி மொழிகளை எவரேனும் ஒருவர் வழங்கினால், நாம் நிச்சயமாக அவருக்கு ஆதரவை வழங்குவோம்.
இப்படியான ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டால், அவர் எந்தத் தரப்பினராக இருந்தாலும் அவருக்காக வேலை செய்ய நாம் தயராகவே இருக்கிறோம்.
இது சிங்களவர்களின் நாடு என முதுகெழும்புடன் ஒருவர் அறிவித்தால், அவரை நாம் ஒன்றாக இணைந்து வெற்றிப் பெறச்செய்வோம். நாம் இப்போது, பிரிந்துப் போயுள்ள சமூகத்தை ஒன்றாக இணைப்பதற்கான செய்றபாடுகளைத்தான் முதலில் ஆரம்பிக்க வேண்டும்.
கட்சி, கட்சி என கூறிக்கொள்ளும் சுயநல அரசியல்வாதிகளால், இந்த நாடே இன்று அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இதனால், 70 வருடங்களாக பின்நோக்கி தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, இனியும் கட்சிப் பேதம் பாராது அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment