மகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்த நான்கு வருட காலத்தில் நாம் அவதானித்த முக்கிய விடயம் என்னவென்றால் வரலாற்றில் இதுவரை காலமும் நிகழாத சம்பவங்களான மகா சங்கத்தினர் மற்றும் நாட்டின் தலைவர்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றன.
அதாவது அண்மையில் பௌத்த மதகுருமார் சிலர் சிகரட் பிடிப்பதைப் போன்ற காட்சிகளை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிறிது நேரத்தில் அதனை நீக்கி இருந்தார்.
இவ்வாறான செயற்பாடுகளை சாதாரணமாக செய்யவில்லை பௌத்த மதத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலேயே மேற்கொள்கின்றனர். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.
இந்த நிலையில், மகா சங்கத்தினரை அவமதித்தவர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிடின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனையே பௌத்த மக்கள் உள்ளிட்ட ஏனைய மக்களும் விரும்புகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.
மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் அறிக்கையொன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அத்தோடு, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அவருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சிங்களே அமைப்பினர் எச்சரித்துள்ளனர். அதற்கமைய, பொலிஸ் தலைமையகம் முன்னால் நாளை போராட்டம் நடத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment