ஜனாதிபதியின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்துகின்ற, கண்டனத்திற்குரிய கூற்றாகும் - சிறிதரன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 2, 2019

ஜனாதிபதியின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்துகின்ற, கண்டனத்திற்குரிய கூற்றாகும் - சிறிதரன் எம்.பி.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபகஷ் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் மனக்குழப்பத்தில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரபாகரன் குறித்து தெரிவித்திருப்பது தமிழரை சீண்டிப்பாக்கும் செயற்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் விற்பனை தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வருமான வழி என்றும், உலகிலுள்ள போதைப் பொருள் வர்த்தகர்களுடன் கொண்டிருந்த தொடர்பினாலும், அதன் வழி வந்த வருமானத்தினாலுமே பிரபாகரன் ஆயுதங்களை வாங்கி போர் நடத்தினார் என்றும் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பாக கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டினுடைய அரச தலைவர் இவ்வாறு பகிரங்கமாக கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்துகின்ற, கண்டனத்திற்குரிய கூற்றாகும்.

சத்தியத்தின் வழியிலும், நேர்மையின் வழியிலும் நின்று தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக இதய சுத்தியோடும், மானசீகமாகவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய தலைவர் பிரபாகரன்.

இப்படிப்பட்டவர்களுக்கு போதைப் பொருள் விற்று ஆயுதம் வாங்க வேண்டிய நிலையை இலங்கை இராணுவம் ஒருபோதும் உருவாக்கியிருக்கவில்லை.

1983 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு தமது ஆயுதப்போராட்ட வாழ்வை விடுதலைப் புலிகள் ஆரம்பித்தனர்.

பின்னர் 1985 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலை மேற்கொண்டு அதிகூடியளவான ஆயுதங்களையும், முல்லைத்தீவு இராணுவ முகாமைத் தகர்த்து ஆட்லறிகளை கைப்பற்றியும், பூநகரி இராணுவ முகாமை தகர்த்தழித்து டாங்கிகளை கைப்பற்றியும், கொக்காவில், மாங்குளம் இராணுவ முகாம்களிலிருந்தும், மட்டக்களப்பின் புளுக்குனாவ போன்ற பகுதிகளிலிருந்து 30mm ஆட்லறிகளை அதிகூடியளவில் கைப்பற்றியிருந்தனர்.

மேலும் குடாரப்பு தரையிறக்கம், சூரியக்கதிர், ஓயாத அலைகள் உள்ளிட்ட திட்டமிட்ட தாக்குதல்களின் மூலம் இராணுவக் காவலரண்களையும், முகாம்களையும் தகர்த்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியிருந்ததும், 1988, 1989 களில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தை வெளியேற்ற அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதும் இந்த உலகமே அறிந்த வரலாறு.

இலங்கையின் வனவளங்களை பிரபாகரனே பாதுகாத்து தந்துள்ளார் என அண்மையில் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய ஜனாதிபதி, காடு வளர்ப்பு முதல் கரையோர பாதுகாப்பு வரை தனது நிர்வாகத்தின் கீழிருந்த மக்களோடு நிலம், நீர், கடல், காடு என அனைத்துக்கும் பாதுகாப்பளித்து, 32 நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்கி, சர்வதேசமே வியந்து பார்த்த ஒரு அரசை பிரபாகரன் வழிநடத்தினார்.

இவ்வாறிருக்க போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்றும் அந்த வருமானத்திலேயே ஆயுதம் வாங்கி விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடாத்தினார் என்றும் திடீரென கனவிலிருந்து முழித்தவர் பிதற்றுவது போல சற்றும் பொருத்தமற்ற ஒரு கருத்தை முன்வைத்திருப்பது அவரது இயலாமையின் வெளிப்பாடே ஆகும்.

சாதாரண சிங்கள குடிமகன் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும், அதன் கொள்கைகள், கோட்பாடுகளையும் புரிந்துகொண்டு, அமைப்பினதும், அதன் தலைவரதும் புனிதத்தன்மையை மதிக்கின்ற சூழலிலும், இன்றுவரை எந்தவொரு அரச தலைவராலும் புலிகள் மீது இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவினால் ரணில் விக்ரமசிங்கவாலும் மனநிலை குழம்பிப் போயுள்ள ஜனாதிபதி வெளியிட்டுள்ள இக்கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வையும் சீண்டிப் பார்ப்பதாக அமைந்துள்ளது” என கூறினார்.

No comments:

Post a Comment