ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கும் ஐ.எஸ். அமைப்பினருக்கு தொடர்பில்லையென பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிடுவதிலிருந்து, அரசாங்கம் கூறியமை பொய்யென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் தொடர்பு காணப்பட்டது என்பதற்கு எவ்வித உரிய தகவல்களும் கிடையாது என குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது என அரசாங்கம் கடந்த மூன்று மாத காலமாக குறிப்பிட்டவை பொய்யென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எவர், எக்காரணங்களுக்காக தாக்குதலை முன்னெடுத்தார்கள் என்பது இதுவரையில் எவ்வித மாறுப்பட்ட கேள்விகளும் இன்றி உறுதிப்படுத்தப்படவில்லை.
தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்று இருக்கும் பட்சத்தில் எவ்வாறு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று நம்பிக்கை கொள்ள முடியும்.
குண்டுத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் எதிர்த் தரப்பினர்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பாக இதுவரையில் எவ்வித முறையான விசாரணைகளும் இடம்பெறவில்லை” என மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment