ஜனாதிபதி பதவியை 2020 வரையில் நீடித்துக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரயத்தனம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ் வருடம் செப்டம்பர் மாதத்தின் பின் ஜனாதிபதித் தேர்தலை ஒரு நாளையாவது பிற்போட முடியாது. அது உரிய நேரத்தில் நடை பெற்றே ஆக வேண்டும் என்று அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
மாத்தளை சுற்றுலா ஹோட்டல் பாடசாலை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்; 1988/89ஆம் ஆண்டுகளில் நாட்டில் அமைதியின்மை நிலவிய காலத்திலும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. வடக்கில் புலி பயங்கரவாத யுத்தத்தின் போதும், தெற்கில் ஜே.வீ.பியினரின் பயங்கரவாத செயற்பாடுகள் நிலவிய காலத்திலும் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல்கள் இடம் பெற்றன.
இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மொட்டுச் சின்னத்தில் கோடாபய ராஜபக்ஷ களமிறக்கப்படவிருக்கின்றார். இவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கும் அதன் மூலம் அவரை உடல், உள ரீதியாக பலவீனப் படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுன கட்சி 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன கூட்டாக பெற்றுக் கொண்ட வாக்குகள் அதற்குச் சமனாகாது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ள நிலையில் அன்றைய தினமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோடாபய ராஜபக்ஷ என்பதை அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
தம்புள்ள நிருபர்
No comments:
Post a Comment