நாடாளவிய ரீதியில் சுமார் ஐயாயிரம் அங்கத்தவர்களைக் கொண்ட வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் தமது அடிப்படை உரிமைகளுக்காக தயாரித்துள்ள ‘வீட்டு வேலை தொழிலாளர் சாசனத்தை’ அரசிடம் கையளிக்கவுள்ளது.
கண்டியைத் தளமாகக் கொண்டு இயங்கும் வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்ட ஒரு தொழிற் சங்கமாகும். இதில் சுமார் 4600ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் உள்ளனர். கடந்த 10 வருடக் காலமாக போராட்டங்களை நடத்தி வந்த போதும் அவை இன்னும் உரிய வகையில் அமுல்படுத்தப்படவில்லை.
எனவே இதுதொடர்பில் வீட்டு வேலை தொழிலாளர் சாசனமொன்றை தயாரித்துள்ளோம். அதனை தொழில் அமைச்சு மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோருக்கு சமர்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள வீட்டு வேலை தொழிலாளர்களை ஒன்று சேர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பரிந்துரைகளைச் செய்துள்ளோம்.
குறைந்த பட்ச வேதனம், மற்றும் வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றில் பங்களிப்புச் செய்தல், வீட்டுவேலைத் தொழிலை மதிக்கத்தக்க தொழிலாக மாறுவதற்கான அம்சங்கள் போன்றன இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே தொழிலாளர் அமைப்புகளுக்கும் இச்சாசனம் ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இச்சாசனத்தில் வீட்டுவேலைத் தொழிலாளர்கள் ஒன்று கூடலுக்கான சுதந்திரம், சம்பளம், ஒப்பந்த முறை கண்காணிப்பு மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்ற மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சம்பளம் மற்றும் ஒப்பந்தம் என்ற பிரிவில் இருபது விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தகுந்த சம்பளம், விடுமுறை, வேலை நேரம், உடல்நலப்பாதுகாப்பு, பாலூட்டும் தாய்மாருக்கான உரிமை, தனியான அறை மற்றும் பாலியல் தொந்தரவற்ற வேலைச் சூழல் போன்ற பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாம் அணி திரட்டப்பட்ட தொழிலாளர் தலைமையிலுள்ள தொழிற்சங்கம் என்பதோடு எமது துறை தற்பொழுது ஒரு முறைசார் துறையாக மாறி வருகின்றது. எனவே கூட்டுமொத்தமாக ‘வீட்டுவேலைத் தொழிலாளர்’ நலன் பேணும் ஒரு காத்திரமான தொழிற்சங்கமாக செயற்படுவதற்கு ஆதாரமாக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வீட்டு வேலை தொழிலாளர் சாசனமானது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவி சரசகோபால் சத்யவாணி, மற்றும் சிவசுப்ரமணியம் பரமேஷ்வரி, சேகுவன் அமரா ஆகியோர் கூட்டாக இவ் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment