வலி. வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான சந்திப்பு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் நேற்று (02) தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பொதுமக்களுடைய தனியார் காணிகள் மீண்டும் பொதுமக்களிடமே கையளிக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் மீண்டும் வட மாகாண ஆளுநரின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களை நான்கு வலயங்களாக பிரித்து அதன் முதற்கட்டமாக 62 ஏக்கர் காணியினை அளந்து அப்பிரதேசத்தின் உரிமையாளர்களை இணங்காணுவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (04) இடம்பெறவுள்ளது.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆளுநர் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து துரிதமாக அக்காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து ஆளுநர் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எஸ். சத்தியசீலன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், வட மாகாண நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், பிரதேசத்தின் காணி உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பிரதேசத்தின் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment