பிக்குகள் பற்றி ரஞ்சன் ராமநாயக்க மோசமாக பேசியதற்கு உடனடியாக அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சி எம்பியான ரதன தேரர் முஸ்லிம்கள் பற்றி மிக மோசமாக, அசிங்கமாக பேசிய போது இதற்கெதிராக அவருக்கு ஒரு கடிதமும் எழுதாதது ஏன் என முஸ்லிம் உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது, ரஞ்சன் ராமநாயக்கவும், ரதன தேரரும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகும். தேரர் கூட்டுக்கட்சியாக இருந்த போதும் அவர் மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. மாறாக நல்லாட்சியை கொண்டு வர பாடுபட்டவர் என்பதற்காக ஐ தே கவால் நியமிக்கப்பட்டவர்.
இந்த நிலையில் மக்கள் பிரதிநிதியான ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பௌத்த மத குருமார் பற்றி பேசியதை பௌத்த சமயத்தை அவமதித்ததாக கருதி உடனடியாக இதற்கான விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் ரணில் விக்ரமசிங்க.
ஆனால் ரதன தேரர் அண்மைக்காலமாக இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ரணிலின் அமைச்சரவை அமைச்சராக இருந்த ரிசாத் பதியுதீன் பற்றி பொய்யாகவும் அசிங்கமாகவும் பேசுவதன் மூலம் அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதித்து வருவது பிரதமருக்கு தெரியாதா?
ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள் என கேட்டு தேரருக்கு ஒரு கடிதமாவது எழுதாமல் விட்டது ஏன்?
பௌத்த மதத்தை கேவலப்படுத்துவது மட்டுமே கேவலம், இஸ்லாத்தை கேவலப்படுத்தினால் அது நல்ல செயல் என பிரதமர் நினைக்கிறாரா? இத்தனைக்கும் 99 வீத முஸ்லிம்களில் ஐ தே கவுக்கு வாக்களித்ததன் காரணமாகவே திரு. ரணில் இன்று பிரதமராக உள்ளார் என்ற நன்றி கூட இல்லாதவராக இருப்பது கவலையானது என் உலமா கட்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment