சமூக ஊடகங்களூடாக வதந்திகளை பரப்புவோருக்கு கடும் நடவடிக்கை : மக்களை அச்சத்துக்குள்ளாக்க சிலர் முயற்சி, குழுவாக செயற்பட இனி எவருக்கும் வாய்ப்பில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

சமூக ஊடகங்களூடாக வதந்திகளை பரப்புவோருக்கு கடும் நடவடிக்கை : மக்களை அச்சத்துக்குள்ளாக்க சிலர் முயற்சி, குழுவாக செயற்பட இனி எவருக்கும் வாய்ப்பில்லை

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாட்டு மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் வகையில் சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வெகுசன ஊடகத்துறை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். 

இவ்வாறு தகவல்களைப் பரப்புபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடமும், சி.ஐ.டியினரிடமும் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, ஷரீஆ சட்டத்தை பயன்படுத்தி சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனரென பௌத்த பிக்கு ஒருவரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

ஆசிய கரையோர பாதுகாப்புத்துறை தலைவர்கள் பங்குகொள்ளும் செயற்பாடுமட்ட 15ஆவது கூட்டத்தொடர் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிடுகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நாட்டு மக்களை மீண்டும் அச்சத்துக்குள்ளாக்கும் வகையில் சிலர் பொய்யான வாந்திகளைப் பரப்பி வருகின்றனர். 

இது போன்ற வதந்திகளை நம்பி வீணாக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏதும் தகவல்கள் கிடைத்தால், அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கும் பொலிஸாருக்கும் அறிவியுங்கள். அந்தத் தகவல் தொடர்பில் ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை நாம் நாட்டு மக்களுக்கு அறியத்தருவோம். 

கடந்த வாரம் இவ்வாறான பொய் வதந்திகள் பரப்பப்பட்டன. இதனால், மீண்டும் சில தேவாலயங்களில் சமய வழிபாடுகள் இடம்பெறவில்லை. பொய் வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம். தெற்கில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும் சிலர் தமது குறுகிய நோக்கங்களுக்காகச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். அதில் எவ்வித உண்மையும் கிடையாது. இது தெற்கு மக்களை குழப்பும் செயலாகும். 

ஸஹ்ரானின் குழுவினர் முற்றாக இல்லாமலாக்கப்பட்டுள்ளனர். மீண்டும் குழுவாக இணைந்து செயற்படக்கூடிய எந்த வாய்ப்பும் இனி அவர்களுக்கு இல்லை. ஏனெனில் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் தற்போதைக்கு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழு புலிகள் போன்ற பயங்கரவாத குழுவல்ல. மாறாக மதத்தை தொடர்புபடுத்தி முன்னெடுக்கும் பயங்கரவாத செயற்பாடாகும். 

எனவே சில நேரம் தனிநபர் ஒருவர் நினைத்தாலும் ஏதாவது ஒன்றை செய்யலாம். இவற்றை அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதை நாம் கண்டுள்ளோம். 

இந்நிலையில், தனிநபரினால் ஏதாவது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது என்று எமக்கு முழுமையாக கூற முடியாது. ஆனால், குழுவாக ஒருபோதும் அவர்களுக்கு மீண்டும் செயற்பட முடியாது. ஏனெனில் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தற்பொழுது சிறப்பாக காணப்படுகின்றது. அதனால் மக்கள் வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை என்றார்.

ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment