மாலபே - கொழும்பு இடையிலான இலகு புகையிரத சேவைக்கான பாதை கட்டுமானப் பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.
நகர்ப்புற வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக, நகர்ப்புற மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்துருகிரிய புதிய நகரத்தை போரே பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொட்டாவை அதிவேக வீதி சந்திக்கும் இடத்திலும் நகரமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையுமென்பதோடு, இந்த திட்டத்திற்காக ஜப்பானிய அரசாங்கம் 1850 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குகின்றது.
இதன் முதற்கட்ட நிர்மாணப்பணிகளுக்கு, 260 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை 6 கட்டங்களாக வழங்குவதே ஜப்பான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
0.1 எனும் சலுகை ரீதியான வருடாந்த வட்டியின் அடிப்படையில் 40 வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
16 புகையிரத நிலையங்களை உள்ளடக்கிய, 17 கிலோமீற்றர் நீளமான புகையிரத பாதையைக் கொண்ட இத்திட்டத்திற்கு, ஜப்பானின் ஜய்கா நிறுவனம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குகின்றது.
இதன் கட்டுமாணப்பணி எதிர்வரும் 2024ஆம் ஆண்டளவில் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment