செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் சகல அபிவிருத்தித் திட்டங்களையும் பூர்த்திசெய்யுமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த வருட இறுதியில் பதவியிழப்பு, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் என பல்வேறு சவால்கள் வந்தபோதும் தமது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு திட்டமும் இடைநிறுத்தப்படாது தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமுர்த்தி வீடமைப்பு லொத்தர் காசோலைகளை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே தற்பொழுது பதவியில் உள்ளது. அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை விமர்சிப்பதற்கோ அல்லது காலால் இழுப்பதற்கோ அரசாங்கத்தில் எவரும் இல்லை.
ஜனவரி மாதம் முதல் அரசாங்கத்தின் சகல திட்டங்களும் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த வருட இறுதியில் எம்மை பதவியிலிருந்து விலக்கி தடையை ஏற்படுத்தினார்கள்.
அதன் பின்னர் நாம் ஆட்சிக்கு வருவோம் என நினைத்திருக்காத நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்து இடைநிறுத்தப்பட்ட சலக திட்டங்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.
அதன் பின்னர் ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு மற்றுமொரு தடை ஏற்படுத்தப்பட்டது. எந்தத் தடைகள், சவால்கள் வந்தாலும் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எதுவும் இடைநிறுத்தப்படாது முழு மூச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக 6 இலட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இது தவிரவும் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா, கம்பெரலிய, கம்உதாவ உள்ளிட்ட சகல வேலைத்திட்டங்களும் முழு மூச்சுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
சகல திட்டங்களையும் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பூர்த்திசெய்யுமாறு அமைச்சர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன். தற்பொழுது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் உள்ளது. அமைச்சுக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு எவரும் அரசுக்குள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் 10 ஆயிரம் வீடுகளை அமைத்து மக்களை மீள்குடியமர்த்தவுள்ளோம். மலையகப் பகுதியில் முதல் தடவையாக அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சின் ஊடாக மலையக மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டங்கள் யாவும் எந்தவித தடையும் இன்றி திறமையாக முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment