இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை கம்பஹா, குருணாகல், கண்டி மற்றும் கொழும்பு வாழ் மக்களே தீர்மானிப்பார்கள் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ஸ தெரிவித்தார்.
மேலும். இந்த நான்கு மாவட்டங்களிலும் வெற்றி பெரும் நபரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தல்தான் தற்போது எமக்கு இருக்கும் ஒரே துருப்பாக காணப்படுகிறது. இதனை நாம் இம்முறையும் தவற விடுவோமானால் நிச்சயமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்காகவும் மன்னிப்புதான் கூறவேண்டும்.
இந்த வெற்றி எமக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகவே கருதப்படுகிறது. இதற்காக நாம் ஆயத்தமாகிக் கொள்ள வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எமக்கு கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் வாக்குகள் 5 வீதத்தால் குறைவடைந்தன.
ஆனால், இதனால் நாம் தோல்வியடையவில்லை. மாறாக கம்பஹா, குருணாகல் மாவட்டங்களில் குறைவான வாக்குகளை பெற்ற காரணத்தினாலேயே நாம் தோல்வியடைந்திருந்தோம்.
இலங்கை வரலாற்றை எடுத்துக் கொண்டால், கம்பஹா, குருணாகல், கண்டி மற்றும் கொழும்பில் ஒரு வேட்பாளர் வெற்றி பெருவாராயின், அவர்தான் அடுத்த ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்வார்.
எனவே, எமது தற்போதைய இலக்கு இந்த மாவட்டங்களில் விசேடமாக வெற்றி பெறவேண்டும் என்பதை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறது” என மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment