புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நிபுணர் குழுவின் அறிக்கை அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என வழிநடத்தல் குழு உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு இரண்டு நாள் விவாதம் நடைபெற்றுள்ள நிலையில் அது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜயம்பதி விக்ரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் அறிக்கை 2017 செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது, அதே நேரத்தில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை 2019 ஜனவரியில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் வழிநடத்தல் குழு இறுதியாக 2019 ஜனவரியிலும் அரசியலமைப்பு பேரவை இறுதியாக 11 ஜனவரி 2019 அன்று கூடி இருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், “அனைத்து நகர்வுகளும் சரியான திசையில் சென்றிருக்குமாயின், நிபுணர் குழுவின் அறிக்கை தொர்பாக அரசியலமைப்பு பேரவையில் விவாதம் நடைபெற்றிருக்கும். விவாதத்தைத் தொடர்ந்து, புதிய அரசியலமைப்பின் வரைவை உருவாக்கி அதை முன்வைப்பது வழிநடத்தல் குழுவின் முக்கிய பணியாக இருந்திருக்கும்” என கூறினார்.
வழிநடத்தல் குழுவிற்கான நிபுணர் குழு தயாரித்த அறிக்கையை அரசியலமைப்பு பேரவையில் கடந்த ஜனவரி மாதம் பிரதமர் ரணில் முன்வைத்தார். இருப்பினும் அப்போதைய சூழலில் தேர்தல் தொடர்பான பரபரப்புக்கள் காணப்பட்மையினால் அது தொடர்பான விவாதத்திற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. எனவே அரசியலமைப்பு செயன்முறையிலும் முன்னேற்றம் காணப்படவில்லை.
இந்நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இரண்டு நாட்கள் விவாதமும் இடம்பெற்றது.
இந்த பிரேரணையை கொண்டுவந்து உரையாற்றிய இரா. சம்பந்தன், புதிய அரசியலமைப்பு தற்போதைய நாடாளுமன்றத்தால் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் அரசாங்கத்திற்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மூலம் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தமையையும் சம்பந்தன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவர்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கை தொடர்பாக உறுதியளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அதைத் தாண்டி செல்லவும் ராஜபக்ஷ அளித்த வாய்மொழி உத்தரவாதத்தையும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
இதேவேளை மஹிந்த ராஸபக்ஷவினால் தெரிவிக்கப்பட்ட 13 பிளஸ் என்பது, தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 வது திருத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டமையை வெளிப்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் தெளிவுபடுத்தியிருந்தார்.
எவ்வாறாயினும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயல்முறையை முன்னோக்கி நகர்த்துவதில் உறுதியாக இருப்பதாக ரணில் அரசாங்கம் கூறிவந்தபோதிலும் நடைமுறையில் அதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்த தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து சர்வதேச அவதானத்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment