அன்று அமோக ஆதரவோடு கொண்டு வரப்பட்ட 18 ஆம் திருத்த சட்டமும் 19 வது திருத்த சட்டமும் இன்று இல்லாது செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவிப்பதாக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதேபோல இந்த மரண தண்டனை வழங்கும் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்று இன்னும் சில காலங்களில் தோன்றலாம். எனவே, சட்டங்களை கொண்டு வருகின்ற பொழுது மிகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் தீர்மானிக்க வேண்டும்.
ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை தொடர்பான தீர்மானத்தை அவர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். தூக்கு தண்டனையை அமுல்படுத்துவதால் மாத்திரம் குற்றச் செயற்களை தடுத்து விட முடியாது.
தூக்குத் தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளில் கூட குற்றங்கள் இடம்பெறுகின்றன. எனவே, இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், இன்று எங்களுடைய நாட்டில் ஏப்ரல் 21 ஆம் திகதி சம்பவத்தின் பின்பு சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் கவனம் செலுத்தி வருகின்றது.
பல நாடுகள் பயணத்தடையையும் விதித்துள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு நாட்டிற்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
இன்று நாம் சர்வதேச ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றோம். அந்த சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற பொழுது இது ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தும். சர்வதேச ரீதியாக பல மனித உரிமை அமைப்புகள் மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றது.
எனவே, நாங்கள் ஒரு சட்டத்தை கொண்டு வருகின்ற பொழுது அதனை பல முறை சிந்திக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.
அன்று 18 ஆம் திருத்த சட்டமும் 19 வது திருத்த சட்டமும் இந்த நாட்டில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று கூறிய ஜனாதிபதியே இன்று அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
எனவே இந்த மரண தண்டனை சட்டமும் கூட நாளை பிழையான ஒரு தீர்மானம் என்ற முடிவிற்கு வரலாம். சட்டங்களை இயற்றுகின்ற பொழுது தெளிவாகவும் சரியாகவும் உரிய முறையில் ஆராய்ந்து பார்த்து அவற்றை நடைமுறைபடுத்த வேண்டும்.
சர்வதேச ரீதியாக பல நாடுகளில் மரண தண்டனை வழங்கப்பட்டாலும் அந்த நாடுகளிலும் குற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே மரண தண்டனை மாத்திரம் இதற்கு தீர்வாக அமையாது. அதே நேரத்தில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரை மனிதன் தண்டனை வழங்கி தூக்கிலிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மலையக நிருபர் தியாகு
No comments:
Post a Comment