முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
அலரி மாளிகையில் இன்று (03) பிற்பகல், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற, சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தையை அடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்கள் இதனை அறிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹகீம், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லீம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான காரணம், இந்நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை மீண்டும் நிலைநாட்டி, நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை மற்றும் அதற்கு காரணமாக அமைந்துள்ள சக்திகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சரியான முறையில் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
குறித்த விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து, ஏதேனும் குற்றச்சாட்டு காணப்படுமாயின் அவற்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கி அவை தொடர்பில் முடிவெடுக்க வேண்டுமென தாங்கள் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
நாம் இந்நாட்டை விரும்புபவர்கள், இந்நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக எமது மக்களும் நாமும் உச்ச ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம்.
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் அமைதியான முறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்ற நிலையிலும் அடிக்கடி வெறுப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் செயற்படுகின்ற விதம் தொடர்பில் நாம் வெறுப்படைந்துள்ளோம் என சுட்டிக் காட்டினார்.
நாம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய போதிலும் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை எனவும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களாக அமரப் போவதாக தெரிவித்ததோடு, இவ்அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு முன்னிற்போம் எனவும் தெரிவித்தார்.
அவ்வாறே, நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு இவ்வரசாங்கம் பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.
நேற்றும் இன்றும் இந்நாட்டில் இடம்பெற்ற ஒரு சில நிகழ்வுகள் எமது மக்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியிருந்தது. ஒரு குறிப்பிட்ட சிறு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டினால் முழு முஸ்லிம் சமூகமும் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், தலைவர்கள் எனும் வகையில் நாமும் குற்றவாளியாக்கப்பட்டுள்ளோம் என்பதில் எமக்கு மன வருத்தம் இல்லை.
குற்றச்சாட்டுகள் யார் மீது முன்வைக்கப்பட்ட போதும் அவற்றை உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என நாம் நம்பவில்லை என்றார்.
No comments:
Post a Comment