நீதிமன்றத்தால் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் எல்லை நிர்ணய செயற்பாட்டை கருத்திற் கொள்ளாது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்குத் தயார் என, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (3ஆம் திகதி) அறிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் S.M. ரஞ்ஜித் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கலைக்கப்பட்டுள்ள வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் தேர்தல்களை விரைவில் நடத்த உத்தரவிடுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு உத்தரவிடக்கோரி உண்மையை கண்டறிவதற்கான அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, எல்.ரி.பீ. தெஹிதெனிய மற்றும் பீ.பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இதன்போது நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment