மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கருத்தை பிரதிபலியுங்கள் : சட்டமுதுமாணி வை.எல்.எஸ் ஹமீட் - News View

About Us

About Us

Breaking

Friday, June 28, 2019

மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கருத்தை பிரதிபலியுங்கள் : சட்டமுதுமாணி வை.எல்.எஸ் ஹமீட்

முஸ்லிம் பெண்களின் திருமண வயது 18 ஆக அதிகரிக்க ஹக்கீம் ஆதரவு என ஹிரு நிகழ்ச்சியில் தெரிவிப்பு!

இது முஸ்லிம்களின் பொதுவான நிலைப்பாடா அல்லது உலமாக்களின் நிலைப்பாடா?

அரசியல் தலைவர்கட்கு சமூக விடயங்களில், குறிப்பாக மார்க்க விடயங்களில் சொந்த நிலைப்பாடுகள் இருக்கலாம். அது அவரவர் மார்க்க அறிவின் ஆழத்தைப் பொறுத்தது.

மேற்கத்தைய சிந்தனைகளால் கவரப்பட்ட அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் பேணுதல் இல்லாதவர்கட்கு சில மார்க்க விழுமியங்களை அதன் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் இருக்கலாம். 

அதற்காக அவர்களது சொந்தக் கருத்துக்களை சமூகத்தின் ஏகோபித்த அல்லது ஆகக்குறைந்தது பெரும்பான்மையோரின் கருத்தாக இல்லாதபோது பொதுவெளியில் முன்வைக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் சமூகத் தலைவர்கள் என்ற முறையில் அவர்களது கருத்துக்கள் சமூகக் கருத்தாக அடுத்தவர்கள் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

நாளை பாராளுமன்றில் இது தொடர்பான சட்டம் வரும்போது மற்றவர்களுக்கு முதல் இவர்கள்தான் கை உயர்த்துவார்கள் போலும்.

மக்கள் உங்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பியது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கே ஒழிய உங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கல்ல.

இன்று தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் எனும் நிலை
அன்று பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா திரும்பத்திரும்ப ‘இலங்கை ஒரு பௌத்த நாடு’ என்று கூறுகின்றார். இலங்கை முஸ்லிம்களெல்லாம் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றார்களா? ஹிஸ்புல்லா என்கின்ற தனிநபரின் கருத்தைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. 

ஆனால் மக்கள் பிரதிநிதியாக, ஒரு பிரதியமைச்சராக பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போது, குறிப்பாக பிரச்சினைக்குரிய விடயங்களில் கருத்துத் தெரிவிக்கும்போது அது மக்களின் பரவலான கருத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.

அதேபோல் தனது பல்கலைக் கழகத்திற்கு பிரச்சினை வரப்போகின்றது என்றதும் ஞானசார தேரர் விடுவிக்கப்பட வேண்டும் என்று பேசுகின்றார். இன்னுமொருவர் ஞானசாரவின் விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடாத்துகின்றார்.

இவ்வாறு, ஒவ்வொருவரும் தான் நினைப்பதைச் செய்வதும் பேசுவதும் சமூகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது தொடர்பாக சிந்திப்பதில்லை. இன்று அவரை விடுவித்ததன் பலனை சமூகம் அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றது. அவரை யார் விடுவிக்க வேண்டும் என குரல் கொடுத்தார்களோ அவர்களின் பதவிகளைத்தான் அவர் முதலில் பலியெடுத்தார்.

எனவே, நீங்கள் மக்கள் பிரதிநிதிகள். மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க வேண்டுமே தவிர உங்களின் தனிப்பட்ட கருத்தைப் பிரதிபலிக்கக் கூடாது.

No comments:

Post a Comment