அன்புக்குரிய இளைஞர்களே! யுவதிகளே! வாசிப்பு கொஞ்சம் கடினமானதுதான். திரும்பத் திரும்ப வாசிப்பது அதைவிடக் கடினமானதுதான். இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் எமது மக்களின் பாதுகாப்பிற்காக நாம் எவ்வாறு போராடப்போகின்றோம்? கொஞ்சம் வாசிப்போம், புரிந்துகொள்வோம், கலந்துரையடுவோம், கருத்துக்களைப் பகிர்வோம், அதன்படி செயலாற்றுவோம்.
ஜல்லிக்கட்டு என்ற தமிழர் மரபுரிமை விளையாட்டினை இந்திய அரசு தடைசெய்தபோது சென்னை மெரீனா கடற்கடையோரம் அணிதிரண்ட பல ஆயிரம் இளைஞர்களும் யுவதிகளும் தமது மரபுரிமை விளையாட்டினைப் பாதுகாத்து மீண்டும் அதன் உரிமையை மீட்டெடுத்துச் சென்றார்கள்.
இப்போது இலங்கை மக்களுக்கும் அப்படியானதொரு போராட்டம் அவசியப்படுகின்றது. இனவாதிகளிடமிருந்து இந்த நாட்டைப் பாதுகாக்கவேண்டிய போராட்டமே அதுவாகும். குறிப்பாக முஸ்லிம் மக்கள் தமது மக்களையும், தமது மக்களின் இருப்பையும் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு மாபெரும் போராட்டத்தை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளிவிடப்பட்டிருக்கின்றார்கள்.
சிங்கள இனவாதிகளின் கண்களுக்கு முன்னால் தெரிவதெல்லாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலும், அதற்கான பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளேயாகும். 2009ம் ஆண்டு புலிகளுடனான யுத்தத்தை நிறைவுக் கொண்டுவந்தவுடன் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களின் உடலங்களின் மீது ஏறி நின்று வாக்குச் சேகரித்தவர்களே ராஜபக்ஷ குடும்பத்தினரும், அவரையொட்டியிருந்த இனவாதிகளுமாவர். இப்போது அதே குடும்பத்தினர் 250ற்கும் அதிகமான கிறிஸ்த்தவ மக்களைப் படுகொலை செய்திருக்கின்றார்கள், அந்த உடலங்களின் மீது ஏறி நின்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் பங்கேற்போம் என்பதை அறிவித்திருக்கின்றார்கள்.
முஸ்லிம் மக்களிடையே அவர்களால் வளர்த்துவிடப்பட்ட ஒரு சில கோடரிக்காம்புகளைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் மீது எல்லையில்லா வெறுப்புணர்வை வளர்த்து அதன் மீதே அவர்கள் பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கான ஆதரவுத்தளத்தைக் கட்டியெழுப்பியிருக்கின்றார்கள், அப்பாவித்தனமான பாமர சிங்கள மக்கள் தம்மையும், தமது இனத்தையும், தமது மதத்தையும் தமது மொழியையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இனவாதிகளின் மாயவலைக்குள் சிக்கியிருக்கின்றார்கள், இனவாதிகள் இப்போதே தாம் வென்றுவிட்டோம் என்ற மமதையில் திளைத்திருக்கின்றார்கள்.
அந்த வெற்றித்திளைப்புத்தான் அவர்களை தலைகால் தெரியாத அளவிற்கு ஆடவைத்திருக்கின்றது. ஆனால் இந்த 250 அப்பாவி கிறிஸ்த்தவர்களையும் கொன்றொழித்த சதியின் பின்னால் இருக்கும் உண்மையான மறைகரங்களை எமது இலங்கை மக்களுக்கு முன்னால் தோலுரித்துக் காட்டுவோமாக இருந்தால் இனவாதிகளின் ஆதரவுக் கோட்டைகள் சுக்குநூறாகிவிடும். அதற்காக இலங்கை மக்கள் அர்ப்பணிப்போடு செயலாற்றவேண்டும், குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிக மிக அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும்.
இதற்கான அழுத்தங்களை குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் கட்சி, இயக்க எல்லைகளுக்கு அப்பால் ஒன்றுசேர்ந்து முன்வைக்கின்றபோது நாம் ஒரு ஆரோக்கியமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இலங்கையில் இடம்பெற்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கண்டித்து எதிர்ப்பதோடு அதனை முற்றாக நிராகரிக்கின்றோம், அதிலே ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படல் வேண்டும் என்பதில் மிகவும் உறுதியோடு இருக்கின்றோம், அதற்கான அனைத்துவிதமான அர்ப்பணிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம்.
ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதலினைத் தொடர்ந்து, முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் பேரினவாத அடக்குமுறைகளையும் நாம் வன்மையாக எதிர்க்கின்றோம். அத்தகைய அடக்குமுறைகளை நாம் ஒருபோதும் அங்கீகரிக்கப்போவதில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றோம்.
“இனவாதங்கள் இந்த நாட்டின் பொது எதிரி” என்று நாம் எல்லோரும் அடையாளம் செய்தல் அவசியமாகும், அது சிங்கள, பௌத்த, தமிழ், இந்து, முஸ்லிம், இஸ்லாமிய, கிறிஸ்தவ, கத்தோலிக்க இனவாதங்களாக இருப்பினும் அவை இந்த நாட்டிற்கு பயனளிக்கப்போவதில்லை என்ற கருத்தில் உடன்பாடு காணுதல் வேண்டும்.
இந்த இனவாதமே இலங்கையை நீண்டகாலமாக அழிவுக்குட்படுத்தியது, இனியும் அழிவுக்குட்படுத்தும் என்பதில் நாம் எல்லோரும் ஒருமித்த கருத்தோடு இருக்கின்றோம் என்றும், இனவாதத்தைத் தோற்கடிக்க நாம் ஜனநாயக வழிமுறைகளில் போராடுவோம் என்றும் உடன்பாடு காணுதல் வேண்டும்.
இவ்விரண்டு அடிப்படை விடயங்களோடும் உடன்பாடு காணுகின்ற அரசியல் கட்சிகள் சமூக அமைப்புக்கள் அனைத்துடனும் “இனவாதங்களைத் தோற்கடித்தல்” என்ற இலக்கில் இணைந்து செயலாற்ற நாம் முன்வருதல், அவர்களை நாம் அழைத்தல். அது எல்லாவிதமான வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒன்றிணைவை ஏற்படுத்தும்.
மாவட்ட ரீதியாக சுழற்சி முறையில் இனவாதங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னகர்த்துதல். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தாம் தற்போது வகிக்கும் அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்து, சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாக தற்போதைய அரசுக்கு ஆதரவு தருவதற்கு முன்வருதல், இதன்மூலம் நாளுக்கு நாள் கட்டியெழுப்பப்படும் இனவாதத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு, நாட்டின் பாதுகாப்பை மேலும் உத்தரவாதப்படுத்த முடியும்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றுக்கு எம்மால் முடியுமான பங்களிப்புக்களை வழங்குவதோடும் அதன் செயற்பாட்டில் உண்மைத் தன்மை, வெளிப்படைத் தன்மை இருப்பதை உறுதி செய்தல். அதற்கும் மேலதிகமாக சர்வதேச புனாய்வாளர்களின் உதவியுடனான சுயாதீன விசாரணைக்குழு ஒன்றினை ஏற்படுத்தி அதனது அறிக்கையினையும் பெற்றுக்கொள்தல்.
இவ்வாறான ஒரு தொடக்கத்தை ஏற்படுத்த நாம் எல்லோரும் முன்வருவோமாக.
அ. அஸ்மின்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
வடக்கு மாகாணம்
01-06-2019
No comments:
Post a Comment