தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் மதப்போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அத்துடன், மதம் என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம் எனத் தெரிவித்துள்ள அவர், அதை விளையாட்டுப் பொருளாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டிக் கிளை அலுவலகத்தில், இந்து மத செயற்பாட்டாளர்கள் சிலருடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “போர்முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களும், அடையாளச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் எச்சங்களும் திட்டமிட்ட அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்துவருகின்றனர்.
மன்னார், திருகோணமலை உட்பட நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் இவ்வாறான அட்டூழியங்களை அரங்கேற்றுவது வேதனைக்குரிய விடயமாகும். சில அதிகாரிகளும் இதற்கு பக்கச்சார்பாகவே நடந்துகொள்கின்றனர்.
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுடன் தொடர்புடைய இறைத்தலங்களிலும், ஏனைய இடங்களிலும் ஆய்வுகளை நடத்தவேண்டுமெனில், அதற்கான நடைமுறைகள் உரியவகையில் பின்பற்றப்படவேண்டும். மாறாக மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையில் எவரும் செயற்படக்கூடாது.
அண்மையில் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்துக்கும் சோதனை வந்தது. குறித்த ஆலயம் உரிய வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கும் தொல்லியல் திணைக்களத்தினர் நுழைந்துள்ளனர். இதற்கு பிக்குமார் சிலரே பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளனர்.
எனவே, மதத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் எவரும் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படக்கூடாது. அனுமதிக்கவும் முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment