ஒரு காலத்தில் ஊடகம் என்பது பத்திரிகையாக மட்டுமே இருந்தது. வானொலி இருந்த போதும் அது எல்லோரிடமும் இருக்கவில்லை. நகரத்தில் வாழ்ந்த மக்களிடம் கூட அது பெரிய அளவில் இருக்கவில்லை.
பத்திரிகைகளில் வருவனவற்றை மக்கள் முழுமையாக நம்பினார்கள். பத்திரிகைகள் உண்மையாகவும் சமூகப் பொறுப்போடும் இயங்கின.
ஒரு பத்திரிகையானது அன்றிரவு வரை உயிர்த்துடிப்புடன் இருந்தது. காலையிலும் மாலையிலும் பெருங் கிராமப் புறங்களிலும் கூட தேனீர்க் கடைகள், சில்லறைக் கடைகளுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் வாங்கில் அமர்ந்திருந்து ஒருவர் பத்திரிகைச் செய்திகளைப் படிக்க ஒரு கூட்டமே அவரைச் சூழ்ந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கும். செய்தி படித்த பிறகு அதுபற்றி விமர்சனங்கள் பரிமாறிக் கொள்ளப்படும்.
காலம் வேகமாக மாறி பல பத்திரிகைகள், பல வானொலிகள், தொலைக்காட்சிகள் என்று அதிகரிக்க அதிகரிக்க ஊடகவியல் நேர்மை என்பது விரைவாக அழியத் தொடங்கிற்று.
எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கை வானொலியில் ஒரு பகுதி நேர ஒலிபரப்பாளனாக நான் இணைகிறேன். 90களின் முற்பகுதியில் ரூபவாஹினியில் செய்தி வாசிப்பாளனாகச் சேர்கிறேன்.
இரண்டு வாரங்களுக்குத் தொடரான பயிற்சிகள் இரண்டு நிறுவனத்திலும் வழங்கப்பட்டன. முகத்திலோ குரலிலோ செய்தியின் அறிவிப்பின் உணர்வைப் பிரதி பலிக்காமல் (சொந்த உணர்வு) பொது மனிதனாக இருக்கச் சொல்லித் தரப்பட்டது. அப்படி குரலில் ஒரு இறக்கம் இருக்க வேண்டுமானால் அது ஓர் அதி முக்கியஸ்தரின் மரணச் செய்தி மாத்திரமே.
இன்றைய ஊடகங்களில் இவற்றையெல்லாம் காண முடியாமல் போயிருக்கிறது என்பது மற்றவர்களுக்கு எப்படியோ ஓர் ஒழுக்க முறையோடு வார்க்கப்பட்ட முன்னாள் ஒலி, ஒளிபரப்புத் துறை சார்ந்தவர்களுக்கு ஒரு நெருடலாகவே ஆகிவிட்டிருக்கிறது. முன்னால் ஒலி, ஒளிபரப்புத் துறை சார்ந்தோரைச் சந்தித்து உரையாடும் போதெல்லாம் அவர்களது கவலையை உணர முடிகிறது.
அநியாயத்திலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் என்பார்கள். அநியாயத்திலும் அநியாயமாக ஊடகம் மாறிவிட்டது!
அஸ்ரப் ஷிஹாப்தீன்,
நாடறிந்த எழுத்தாளர்.
No comments:
Post a Comment