உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதற்கு பின்னரான வன்முறைகளில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்டஈடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு இன்று (29) காலை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்திற்கு வருகை தந்தார்.
இதன்போது தேவாலயத்தின் தற்போதைய நிலையினை பார்வையிட்ட பிரதமர், குறித்த தேவாலயத்தின் தலைமைகள் தொடர்பில் தேவாலயத்தின் போதகர் ரொசான் மகேஷுடன் கலந்துரையாடினார்.
அத்துடன் தேவாலய புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படையினருடனும் கலந்துரையாடிய பிரதமர், குறித்த தேவாயலத்தினை புனரமைப்புச் செய்யும் பணியை முன்னெடுத்துள்ள படையினருக்கு பாராட்டினை தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நன்றியையும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடிய பிரதமர், தனது அனுதாபங்களையும் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் சேதமடைந்த கட்டிடங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிற்கும் நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காகவே நான் இங்கு வருகை தந்துள்ளேன்.
ஒரு குடும்பத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபா வீதமும் காயமடைந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபா வரையிலும் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்ட 189 பேருக்கு 185 மில்லியன் ரூபா பணம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்த 403 பேருக்கு 53 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையினால் உறுதிப்படுத்தப்படும்போதும் நஷ்டஈடு காரியாலயம் ஊடாக மேலதிக நட்டஈடு வழங்குவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கும் மீளக்கட்டுவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதன்பிரகாரம் அரசாங்கம் 100 மில்லியன் ரூபாவை வழங்க இருப்பதுடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து 200 மில்லியன் ரூபா வரை கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.
அதேபோன்று மினுவங்கொட, குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல போன்ற பகுதிகளில் வன்முறைகளனினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுகள் போன்றவற்றிற்கு நட்டஈடுகளை வழங்குவதற்காகவும் அப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு பகுதி பகுதியாக நிதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
No comments:
Post a Comment