தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக வாக்களிக்க முன்வராது என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் மட்டக்களப்பிலும் கொழும்பிலும் அதிகளவான தமிழ் மக்களே கொல்லப்பட்ட நிலையிலும் கூட்டமைப்பு அதனை கவனத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆளுநர்கள் மற்றும் அமைச்சருக்கு எதிரான அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாத்திற்கு துணை போகின்றவர்களைத் தவிர ஏனைய அனைத்து சாதாரண முஸ்லிம் சமூக மக்கள் மத்தியில் குறித்த இரு ஆளுநர்கள் மீதும் ரிஷாட் பதியுதீன் மீதும் எதிர்ப்புக்கள் உள்ளன. அத்தோடு பல்வேறு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இவர்கள் உடன் பதவி நீக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், அடிப்படைவாதிகளுக்கு எதிராக நேரடியாகக் களமிறங்கி போராட முன்வந்துள்ள அத்துரலிய ரத்ன தேரரை நாம் வரவேற்கின்றோம். அவரின் போராட்டத்துக்கு பூரண ஆதரவை வழங்குகின்றோம்.
இதனிடையே, ஜனாதிபதியும் பிரதமரும் தத்தமது சுய தேவைகளுக்காக தமிழ் மக்களை ஏமாற்றினார்கள் என்றால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அவ்வாறே செய்து கொண்டிருக்கிறார்கள்.
தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் மட்டக்களப்பு மற்றும் கொழும்பில் அதிகளவாக தமிழ் மக்களே கொல்லப்பட்டனர். ஆனால் கூட்டமைப்பு இதனை துளியேனும் கவனத்திற் கொள்ளவில்லை. அவர்கள் தமது சுய தேவைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இவர்கள் வாக்களிக்கப் போவதில்லை என்பதையும் தெளிவாகக் கூற முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment