முஸ்லிம்களாகிய நாம் அமைச்சு பதவிகளில் இருப்பதால், ஏதேனும் அழுத்தங்கள் ஏற்படுவதாக இருக்குமானால் நாம் எமது பதவிகளிலிருந்து விலகி, பொலிசார், இராணுவம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடியுமான அளவில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்தார்.
குற்றங்களுடன் தொடர்புடையோர் யாரேனும் இருப்பார்களாயின், அவர்கள் எவ்வாறான பலம் பொருந்தியவர்களாயினும் அவர்களை சட்டத்தை நிலைநாட்டுவதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்தி தருகின்றோம் அது எமது கடமையுமாகும் என தெரிவித்தார்.
இப்பிரச்சினை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தில் (கேகாலை) இருந்து ஆரம்பமானது. எனது ஒருங்கிணைப்பு செயலாளரான தஸ்லீம் என்பவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு எதிராக புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் வழங்கி, குற்றப் புலனாய்வு திணைக்களத்துடன் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, காயமடைந்து இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாதிகள் உருவாகுவதற்கு காரணம் ஏதும் இருப்பின் அதனை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆராய வேண்டும். நாம் அதற்கு நடவடிக்கை எடுத்தோம். முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இல்லை என்று சொல்ல முடியாது.
நாம் வேறு வேறு கட்சிகளில் இருப்பவர்களாக இருக்கலாம் வெவ்வேறு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்கலாம். ஆனால் இந்நாடு என்பது முதன்மையான விடயமாகும்.
No comments:
Post a Comment