“பௌத்த பிக்குகள் தோற்றுப்போனார்கள்” என்பதும், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்” என்பதும் இரு துருவத் தீவிர நிலைகளாகும். இந்த இரண்டையும் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, எனவேதான் மூன்றாவது நிலைமை ஒன்று அவசியப்படுகின்றது.
மக்கா வெற்றியைக் கடந்து வந்த சமூகம் நாங்கள், ஹுதைபிய்யா உடன்படிக்கையைக் கடந்து வந்த சமூகம் நாங்கள், இராஜதந்திரம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்ன சமூகத்தின் வரலாற்றினைப் பகிர்ந்து கொள்ளும் மக்கள் நாங்கள்.
இந்த நாட்டில் இனவாதத் தீவிரவாதிகளினால் அழிவும், அமைதியின்மையும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், இந்த நாட்டில் நீதி நிலைநிறுத்தப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்திலும். ஒரு சமூகமாக முஸ்லிம் மக்கள் ஒரு தீர்மானத்தை நோக்கி நகர்த்தல் அவசியமாகும்.
மேற்படி குண்டுத் தாக்குதல்களோடு முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே தொடர்புபடுத்தி பலிசுமத்தியிருக்கின்றார்கள். மேற்படி குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
நீதியான விசாரணை உறுதி செய்யப்படல் வேண்டும். மேற்படி குண்டுத் தாக்குதல்களுக்கும், ஜனாதிபதிக்கும் ஏனைய சிங்களப் பேரினவாதிகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படல் வேண்டும்.
இந்த விசாரணைகளைத் திசைதிருப்புவதற்காக சிங்களப் பேரினவாதிகள் தம்மால் முடியுமான அதி உச்ச எல்லைக்குச் செல்வார்கள், அதற்காக சிறுபான்மை மக்களின் மீது அத்துமீறுவார்கள், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவார்கள்.
சிங்களப் பேரினவாதிகளின் இத்தகைய நிகழ்ச்சி நிரலை நாம் முன்கூட்டியே அடையாளம் கண்டிருக்கின்றோம். அவர்களது நிகழ்ச்சி நிரலை சடுதியாக திசை திருப்பும் ஒரு நடவடிக்கை அவசியப்படுகின்றது. முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுனர்கள் தமது பதவிகளில் இருந்து விலகுவது இதற்கான ஒரு உக்தியாக அமையும்.
ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், ஆளுனர்களும் ஒரு கூட்டான தீர்மானத்தின் அடிப்படையில் தமது பதவிகளில் இருந்து வெளிநடப்புச் செய்வதும் அதனைத் தொடர்ந்த மிகவும் விணைத்திறனான தேசிய, சர்வதேச ரீதியான எதிர்வினையாற்றுகையினை உறுதி செய்தலும் இவ்விடயத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். அது முஸ்லிம் மக்கள் சார்பில் நன்மைகளை ஏற்படுத்தும் என்பது எனது அபிப்பராயமாகும்.
அ. அஸ்மின்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்,
வடக்கு மாகாணம்.
03-06-2019
No comments:
Post a Comment