ஆடை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுதலை - தர்மச்சக்கரமா? இல்லையா? என சரியான தீர்மானத்திற்கு வர முடியாமல் தினறும் புத்தசமய ஆணையாளரும் தரநிர்ணய சபையும் !!! - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

ஆடை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுதலை - தர்மச்சக்கரமா? இல்லையா? என சரியான தீர்மானத்திற்கு வர முடியாமல் தினறும் புத்தசமய ஆணையாளரும் தரநிர்ணய சபையும் !!!

தர்மச்சக்கரம் பதித்த ஆடை அணிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்மணி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு மீண்டும் நவம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (03.06.2019) தர்மச்சக்கர வழக்கு மஹியங்கனை நீதவான் A.A.P.லக்‌ஷ்மன் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுக்கப்பட்டது.

பொலிசார் : புத்தசமய அலுவல்கள் ஆணையாளருக்கும் தரநிர்ணய சபைக்கும் அனுப்பப்பட்ட ஆடையிலுள்ள வடிவத்தை ஒப்பிட்டு நோக்குவதற்கு தங்களிடம் சரியான தர்மச்சக்கரத்தின் வடிவம் இல்லை என்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தைச் சொல்வதால் நாம் சரியான முடிவுக்கு வரமுடியாமலிருப்பதால் ஆடையின் வடிவம் தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்கு குறிப்பிட்ட இரு தரப்பினரும் தர்மச்சக்கரம் தொடர்பான சட்டமா அதிபரின் பரிந்துரையை எதிர்பார்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நாம் : சட்டமா அதிபரின் வேலை வழக்கை தொடர்ந்து நடத்துவதா? இல்லையா? என முடிவெடுப்பதே! குறிப்பிட்ட ஆடையிலிருக்கும் வடிவம் தர்மச்சக்கரமா ? இல்லையா என முடிவெடுப்பது புத்தசமய அலுவல்கள் ஆணையாளரே!

பொலிசார்: : எவராலும் முடிவெடுக்க முடியாத ஒரு விடயமாக இது இருப்பதால் எமது உயர் அதிகாரிகள் எல்லோரதும் முடிவின் படி B அறிக்கையை திருத்தி பாரதூரமான ICCPR சட்டத்தின் பிரிவு குற்றமாகிய இனமுறுகல் குற்றச்சாட்டை நீக்கி சாதாரணமான தண்டணைச் சட்ட கோவையின் பிரிவு 291 B கீழ் மத நிந்தனை குற்றம் புரிந்ததாக இன்று மன்றில் அறிக்கையிடுகிறோம்.

நாம் : (கடந்த வழக்குத் தவணையின் போது நாம் வைத்த வாதங்களை சுருக்கமாக விபரித்ததுடன்) தண்டணைச் சட்டக் கோவையின் பிரிவு 291 (B) ன் கீழான தவறானது பிணையில் விடக்கூடிய தவறு என்பதால் சந்தேக நபரை பிணையில் விடும்படி வேண்டிக்கொள்கிறோம்.

எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் (வழக்கு தொடுனர்கள் மீது நாமும் உலக மக்களும் வைத்திருந்த அதிர்ப்திகள் அனைத்தையும் சுமந்த வார்த்தை பிரயோகங்களை ஹசலக பொலிசாரை நோக்கி காரசாரமாக அள்ளி வீசியதுடன்) ஆடையிலிருக்கும் வடிவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 04/11/2019 திகதி ஒத்தி வைத்து மஸாஹிமாவை பிணையில் விடுதலை செய்தார்.

.அல்ஹம்துலில்லாஹ்!

கொழும்பில் வசிக்கும் நாம், அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து இந்த வழக்கை பொறுப்பெடுத்த போது பலரின் அச்சுறுத்தல்களுக்கும் கேலிப்பேச்சுக்களுக்கும் ஆளாகினோம்.

புண்பட்டிருக்கும் எமது உள்ளங்களின் ரணங்களை மஸாஹிமாவினதும் அவரது உறவினர்களின் கண்களிலிருந்து வந்த ஆனந்த கண்ணீர் சுகப்படுத்திய சந்தோசத்துடன் நானும் எனது மனைவி நுஷ்ராவும் மஹியங்கனை நீதிமன்றை விட்டு வெளியேறினோம்.

சட்டத்தரணி சறூக்

No comments:

Post a Comment