மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்தும் யோசனைக்கு ஆதரவு வழங்க முடியாது - அமைச்சரவை, ஜனாதிபதி, சபாநாயகருடன் பேச்சு நடத்த திட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2019

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்தும் யோசனைக்கு ஆதரவு வழங்க முடியாது - அமைச்சரவை, ஜனாதிபதி, சபாநாயகருடன் பேச்சு நடத்த திட்டம்

உயிர்களை கொல்வது ஐ.தே.கவின் கொள்கைக்கு முரணானது என்பதால் மரண தண்டனையை அமுல்படுத்தும் யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஆளும் தரப்பிலுள்ள பிரதான கட்சியான ஐ.தே.க, பொதுஜன பெரமுன கட்சி, ஜே.வி.பி., தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பனவும் மரண தண்டனையை மீள அமுல்படுத்துவதற்கு உடன்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

மாரிஅராவ குடிநீர்த் திட்ட திறப்பு விழாவின் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, இந்தப் பிரச்சினை தொடர்பாக முதலில் அமைச்சரவையுடனும் அடுத்து ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடனும் பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட பிரதமர், 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மரண தண்டனையை தடுக்கும் யோசனைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கிய போது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக தானும் இருந்ததாகவும் கூறினார்.

2018 டிசம்பர் 17 ஆம் திகதி ஐ.நாவில் அந்த யோசனை மீண்டும் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட போதும் இலங்கை அதற்கு ஒத்துழைப்பு வழங்கியது. அந்த சமயமும் தாம் இருவருமே பதவி வகித்ததாக பிரதமர் நினைவு கூர்ந்தார்.

மரண தண்டனை அமுல்படுத்துவதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தான் முதலில் முடிவு செய்தார். அதன் பின்னர் ஆர்.பிரேமதாஸ, டீ.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் அந்த முடிவை தொடர்ந்து முன்னெடுத்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் முன்னெடுக்காத அபிவிருத்திகளை மொணராகலை மாவட்டத்தில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

2015 இல் முழு உலகமும் இலங்கையை ஒதுக்கியிருந்த நிலையில் நாட்டை மீட்டது மாத்திரமன்றி பாரிய கடன்சுமையையும் செலுத்தியதாக கூறிய அவர் மக்களின் ஜனாநாயக உரிமைகளை உறுதிப்படுத்தியதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment