தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு 3 மாதத்தில் அரசு உறுதிப்படுத்த வேண்டும் : தமிழரசுக்கட்சியின் 16வது மாநாட்டில் முக்கிய பிரகடனம் - தவறினால் ஜனநாயக வழியில் மக்கள் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2019

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு 3 மாதத்தில் அரசு உறுதிப்படுத்த வேண்டும் : தமிழரசுக்கட்சியின் 16வது மாநாட்டில் முக்கிய பிரகடனம் - தவறினால் ஜனநாயக வழியில் மக்கள் போராட்டம்

ஐக்கிய இலங்கைக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மீண்டும் வலியுறுத்தினார்.

மூன்று மாத காலத்துக்குள் அரசாங்கம் நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும். தவறினால் ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா இங்கு தலைமையுரை ஆற்றும்போதே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

தமிழின அடையாளங்களை அழிக்கும் வகையிலான இனக்குடிப்பரம்பல் நிறுத்தப்பட வேண்டும். காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் உண்மையைக் கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி நீண்ட காலம் சிறையிலுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

பௌத்த அடிப்படைவாதிகள் இந்து மக்கள் கோவில்களில் இந்து கலாசார மையங்கள் புனித பிரதேசங்களில் ஆக்கிரமிப்பு செய்து புத்தர் சிலைகளையும் விக்கிரகங்களையும் கட்டிவரும் அத்துமீறல் அடாவடித்தனங்களுக்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் பிரசாரம் செய்துவருகின்றனர். இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளில் இணங்கிய விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பில் சர்வதேச சமூகம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இம்மாநாட்டிலிருந்து எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அல்லது ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தீர்மானிக்க வேண்டும்” என்றும் மாவை சேனாதிராஜா தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அனைத்து சக்திகளையும் அணிதிரட்டி ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்தவேண்டுமென்ற பொறுப்பை வரலாற்றுக் கடமையை தெரிவு செய்து கொண்டிருக்கின்றேன். எல்லோரும் தமிழ்த் தேசியத்தின் தமிழ், - முஸ்லிம், தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும் ஒன்றுபட்டுழைக்க திடசங்கற்பம் பூணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பு கட்சிகளின் பிரேரணையை ஏற்காது விட்டமை தவறான விளைவுகளை ஏற்படுத்தி விட்டன. அதன் விளைவு தமிழர் தேசம், தமிழ் மக்கள் பல கூறுகளாகி புதிய புதிய கட்சிகளாய் தமிழர் பலம் சிதையும் நிலையை எட்டியிருக்கிறது. ஒன்றுபட்ட தேசமாய், ஒன்றிணைந்த தமிழர்களாய் எம் தமிழர், தமிழ் பேசும் மக்கள் விடுதலை பெற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். 

2013 இல் பலதுறைகளில் மேம்பட்டவர்களின் வடக்கு மாகாண சபையாக அமைந்தது. 2/3 பங்கு உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பெற்றனர். ஐந்தாண்டு முடிவில் இச்சபை எதைச் சாதித்தது என்று எம்மக்களிடம் எழுங்கேள்விக்கு நாமே பொறுப்புக் கூற வேண்டி ஏற்பட்டுவிட்டது.

அரசியலமைப்புக் குற்றங்களைத் தொடர்ச்சியாக இழைத்துவரும் ஜனாதிபதி, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பெரும்பான்மை வாக்குகளுடனும் ஏகமனதாகவும் நிறைவேற்றிய 30/1, 34/1, 40/1 தீர்மானங்களை நிறைவேற்ற மறுத்து, இலங்கைத் தீவின் முக்கிய தீர்க்கப்படாத இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணக் கூடிய அரிய சந்தர்ப்பங்களையும் போர் குற்ற விசாரணைகளையும் நிராகரித்து நிற்கும் ஜனாதிபதி மீது அரசின் மீது சர்வதேச நாடுகளும், ஐ.நா அமைப்புக்களும் பிரதமராக ராஜபக்ஷவை நியமித்த போது அதற்கு எதிராகச் செயல்பட்டது போல ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லையென ஆதங்கப்படுகிறோம். 

இவை தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் தமிழர் பிரதிநிதிகள் இராஜதந்திர முறையில் பேச்சு கேள்வி எழுப்புகிறோம். பேச்சு நடத்த வேண்டும் என்பது காலத்தின் தேவை.

ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் தற்கொலைக் குண்டுதாரிகளை வெடிக்க வைத்துப் போரைத் தொடங்கிவிட்டனர். இலங்கை வரலாற்றில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை விட பௌத்த சிங்கள அடிப்படைவாத மேலாதிக்கமும் பேரினவாதமும் ஏனைய மதங்களையும், தமிழினத்தையும் அடக்கி ஒடுக்கி அழித்துவிட அரசியல் அடிப்படையிலும் எடுத்து வரும் நடவடிக்கைகளும் எந்த வகையிலும் குறைந்தது அல்ல என மதிப்பிட வேண்டும்.

மத, இன, ஜனநாயக சமத்துவம் இலங்கையில் இல்லை என்பது வெளிப்படை. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பினால் 250 பேர் கொல்லப்பட்டனர், 500 பேர் வரை காயமடைந்தனர். பொருளாதார சமூக ரீதியில் பேரழிவு ஏற்பட்டபோது சர்வதேசம் இலங்கைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென இலங்கைக்குள் வந்து விட்டன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பெரு வெற்றி பெற்றது. அரசின் பங்காளிகளாகவோ அமைச்சரவை பங்காளிகளாகவோ இருந்ததில்லை. தமிழினப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கும் போரினால் சிதைந்த தமிழ் பேசும் மக்கள் தேசத்தையும், மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச அரங்கில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதுமான தீர்மானங்களின் அடிப்படையில் அரசை ஆதரித்து வந்திருக்கிறது. 2016 இல் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானமெடுத்திருந்தது.

பாராளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பு முன்வைக்கப்படும் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் 225 பேரில் 157 உறுப்பினர் 2/3 பெரும்பான்மைப் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவுடன் பேணி வந்திருக்கிறது. 2018 ஒக்டோபர் 26 இல் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கு முன்னரே ஜனாதிபதியின் சுதந்திரக்கட்சி தேசிய அரசிலிருந்து விலகிவிட்டது. இதுவும் ஓர் அரசியல் தவறேயாகும்.

புதிய அரசியலமைப்பில் நாட்டின் முக்கிய தேசியப் பிரச்சினையாக இருக்கின்ற தமிழ் இனப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்குமாகவே ஜனாதிபதித் தேர்தலில் 62 இலட்சம் மக்கள் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறவைத்தனர். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஜனாதிபதி அற்பத்தனமாக முறியடித்து விட்டார். இச்செய்கையானது மீண்டும் ஒரு வரலாற்றுத்தவறாகும். பௌத்த அடிப்படைவாத நிலைப்பாட்டை ஏற்றுவிட்டார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

யாழ். விசேட நிருபர்கள்

No comments:

Post a Comment