றவூப் ஹக்கீம் மீதான காழ்ப்புணர்ச்சியும் : முஸ்லிம் சமூகம்சார் அவரின் பணியும் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

றவூப் ஹக்கீம் மீதான காழ்ப்புணர்ச்சியும் : முஸ்லிம் சமூகம்சார் அவரின் பணியும்

எம்.என்.எம். யஸீர் அறபாத் -ஓட்டமாவடி
கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களினால் முஸ்லிம் சமூகம் இன்று வரை பல துயரங்களை அனுபவித்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழிகளிலிருந்து சமூகத்தை விடுவிப்பதற்கும், சுமூக நிலையை ஏற்படுத்தி மக்களின் அன்றாட வேலைகளைச் செய்து வருவதற்கும் பொறுப்புணர்வுடன் இஸ்லாமிய மார்க்கத்தலைமைகளும், அரசியல் தலைமைகளும் செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், மார்க்க, அரசில் தலைமைகளை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறு உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,தாங்கள் சார்ந்த அரசியலுக்கும்,கொள்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, இவ்வாறான நெருக்கடியான நிலைமையில் சமூகம் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிலையில், தங்களின் அஜந்தாக்களை சமூக வலைத்தளங்களினூடாக நிறைவேற்ற முற்படுவது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

குறிப்பாக, அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம், அதிகம் விமர்சிக்கப்பட்டு வருதை நாம் காணலாம், இச்சூழ்நிலையில் அவர் மேற்கொண்ட பணிகளை மறைத்தும், மறந்தும், அவர் மீதுள்ள காழ்புணர்ச்சியைத் கொட்டித்தீர்க்க முற்படுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

றவூப் ஹக்கீம் என்ன செய்தார்?
ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் இடம்பெற்ற பின்னர் பல நெருக்குவாரங்களுக்கு முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்க நேர்ந்தது என்பதுடன், சில முஸ்லிம் அரசியல்வாதிகளூம் குற்றஞ்சாட்டப்பட்டு ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் குற்றவாளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் மீது பாரிய சமூகப்பொறுப்பு சுமத்தப்பட்டிருந்தது.

இப்பொறுப்பை உணர்ந்து, இந்த அசாதாரண நிலைமைகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை விடுவிப்பதுடன், போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகளையும் (தன்னை எதிர்ப்பவர்களாக இருந்த போதும்) இந்தச்சந்தர்ப்பத்தில் அவைகளை மறந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவும், பொறுமையாகவும்,நிதானமாகவும், மார்க்கத் தலைமைகளின் வழிகாட்டல்களுடன் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்ஏ.எச்.எம்.பௌசி அவர்களின் தலைமையில் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

முன்னெடுப்புகள் சில….
உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குல் நடைபெற்ற பின்னர், அன்று (21) காலை கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் நாட்டில் குழப்பத்தை, கலவரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன. சொந்த நோக்கங்களுக்காக நடாத்தப்பட்டுள்ள இத்தாக்குதலை கண்டிப்பது நமது தார்மீகப் பொறுப்பாகும்.என தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

* சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பௌசி அவர்களின் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத்தலைவர் உட்பட ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு குண்டுத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தின் தலைமையான கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களைச் சந்தித்து தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், முஸ்லிம் சமூகத்திற்கும் இந்தத்தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

எமது நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் உயிர்தெழுந்த ஞாயிறு பயங்கரவாதத்தாக்குதல் தொடர்பில் கடந்த மாதம் (24)ம் திகதி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போது, தனதுரையில் “அரசியல் ரீதியாக ஒருவரையொருவர் கை நீட்டாமல், அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதிகளை இல்லாதொழிக்க முன்வர வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

இத்தாக்குதல் தொடர்பாகவும்,முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் நெருக்கடி தொடர்பாகவும், இத்தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் சம்பந்தமில்லை என்பதுடன், இத்தாக்குதலையும்,தாக்குதல்தாரிகளையும் முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லையென்பதை சர்வதேச சமூகத்திற்கும், சர்வதேச ஊடகங்களுடாக விளக்கமளித்தார்.

உயிர்தெழுந்த ஞாயிறு பயங்கரவாதத்தாக்குதல் தொடர்பில் இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் அவுஸ்திரேலிய ABC தொலைக்காட்சிக்கும் நேர்காணலை வழங்கினார்.

ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு வழங்கி செவ்வியின் போது, “பெரும்பாலான முஸ்லிம் சமயத்தலைவர்கள் புர்கா அணிய வேண்டாமென்று தான் கூறுகின்றனர். ஆனால், அதை சட்டத்தின் மூலம் திணிக்க முடியாது. யுத்த காலத்தில் மரம் செடிகளை எரிப்பதற்குக்கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை” இவ்வாறு விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

உள்நாட்டு ஊடகங்களிலும் பெரும்பான்மை மக்கள் மத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், பல்வேறான சந்தகங்களுக்கும் விளக்கமளித்தார்.

சிரச தொலைக்காட்சியில் “சட்டன” நேரடி நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதன் போது ஆளுனர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிசாட் பதிவுதீன் இருவரையும் தீவிரவாதத் தாக்குதல்களுடன் இணைத்து கேட்ட போது தான் ஒரு சமூகத்தின் தலைவன், பொறுப்புள்ள அமைச்சர் என்ற அடிப்படையில் இவ்வாறான விடயங்களில் சம்பந்தப்பட்டிருக்கமாட்டார்கள் என்று பதிலளித்தார்.

சுவர்ணவாகினி தொலைக்காட்சி “ரத்து இர” நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நிதானமாகப் பதிலளித்தார்.

வசந்தம் தொலைக்காட்சியின் “அதிர்வு” நேரடி நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு சந்தேகங்களுக்கும்,கேள்விகளுக்கும் நிதானமாகப் பதிலளித்தார்.

தற்போதைய சூழ்நிலையை விளக்கவும், பெரும்பான்மை மக்களின் சந்தேகங்களைக் களையவும், தவறான முறையில் முஸ்லிம்களை சில ஊடகங்கள் சித்தரிப்பதைக் கண்டித்தும், தெளிவுபடுத்தியும் ஊடக மாநாடுகளில் கலந்து கொண்டு மும்மொழிகளிலும் உரையாற்றினார். அத்தோடு, பெரும்பான்மை மக்களுக்கு தெளிவை வழங்கும் பொருட்டு, அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, ஒரு சிறிய குழுவினர் மேற்கொண்டு வரும் படுகொலை கலாசாரத்தை முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட றவூப் ஹக்கீம், “தேடுதல் நடவடிக்கைகளின் போது, மக்களின் உணர்வுகளை மதித்து, ஊடகங்களை அங்கு அழைத்துச்செல்வதை பாதுகாப்புத்தரப்பினர் முற்றாக நிறுத்த வேண்டும். சில ஊடகங்கள் சிறிய விடயங்களையும் பெரிதுபடுத்தி காண்பிக்கின்றன என வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர் ஜனாதிபதியும் தேடுதல் நடவடிக்கையின் போது ஊடகங்களை அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு கட்டளையிட்டார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு மும்மொழிகளிலும் றவூப் ஹக்கீம் உரையாற்றினார் “முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாத்துடன் தொடர்புடையதாகச் சித்திரிப்பதையும் உடன் நிறுத்த வேண்டும்” என்ற கோரிக்கையும் முன்வைத்தார்.

Capital ஊடக நேர்காணலின் போது “முஸ்லிம்ங்கள் அளவுக்கதிகமான விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு அடிமைத்தனமாக அது மாறி விடக்கூடாது” என்றும் பொறுப்புணர்வுடன் பதிலளித்தார்.

அதே போன்று, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் போது,
உயிர்தெழுந்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாகவும், இதில் முஸ்லிம் சமூகத்தை இணைத்து மேற்கொள்ளப்படும் போலிப் பிரசாரங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத்தூதுவர் அலய்னா பீ. ரெப்லிட்ஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து அண்மைய தற்கொலைத்தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் நிலைமை குறித்தும் இதர முக்கிய விடயங்கள் குறித்துமான கலந்துரையாடலின் போதும் முஸ்லிம்களின் அச்சத்தைப்போக்குவதே இன்றைய அவசரத்தேவை என்பதை தூதுவரிடம் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

நாட்டின் அதியுயர் சபையான பாராளுமன்றத்திலும் பல சந்தர்ப்பங்களில் தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்குவாரங்கள் தொடர்பாகவும் உரையாற்றியுள்ளார்.

அவ்வுரையில் “முஸ்லிம்களின் கலாசார விடயங்களில் தேவையில்லாத தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதை நிறுத்தியுள்ள நிலையில், தலையை மறைத்து ஏனைய ஆடைகளை அணிந்து செல்லும் போது, அதற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவை நிறுத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

அதே போன்று, பயங்கரவாதத்துடன் தொடர்புபடாது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பது தொடர்பான செயற்பாடுகளையும் தனது தலைமையில் கட்சியின் சட்டத்தரணிகளை உள்ளடக்கியதாக குழுவொன்றை நியமித்து, அவை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதைத் தடுக்கும் சுற்று நிரூபம் வெளிவந்த போது, முஸ்லிம் பெண்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினார்கள், அவர்களுக்கு உதவி செய்வதற்காக கட்சித் தலைமையகத்திலுள்ள கட்சியின் முக்கியஸ்தர்களைக்கொண்ட குழுவொன்றை இவற்றுக்கு தீர்வைப்பெற்றுக் கொடுக்கப் பணித்தார்.

அத்தோடு, உயர் கல்வித்துறையில் இவ்வாறான அசௌகரியங்களை முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்குவதைத் தவிர்ப்பதற்கு சுற்று நிரூபமொன்றை வெளியிடச்செய்தார், பின்னர் இந்த சுற்று நிரூபத்தை பொதுவாக எல்லாத்துறைகளிலும் பயன்படுத்துவதற்கான ஆலோசனையை ஜனாதிபதி விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் றவூப் ஹக்கீம், ஜனாதிபதி, பிரதமரினதும் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். இவற்றுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறான சூழ்நிலையில், சமூகம் எதிர்நோக்கும் சவால்களைச் சாணக்கியமாக வெற்றி கொள்வதற்கான நகர்வுகளை நகர்த்திக்கொண்டிருக்கும் போது, மே மாதம் 13ம் திகதி முஸ்லிம்களுக்கெதிராக பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒரு இனவாதக்குழுவால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவ்வன்முறையில் முஸ்லிம்கள் உயிர், பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.

இவை தொடர்பான முன்னெடுப்பு சில…
இந்தச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், வன்முறைகள் மேலும் அதிகரிக்கப்படாதிருப்பதற்கும்,ஏனைய பிரதேசங்களுக்கும் பரவிச்செல்லாது தடுப்பதற்குமான நடவடிக்கைகளை இரவு, பகல் பாராது றவூப் ஹக்கீம் உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான BMICH இல் செயற்பாட்டு அறையொன்றை ஏற்பாடு செய்து பிரதமரையும் அழைத்து வந்து நிலைமைகளைக் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார் இதனால் வன்முறை பரவலாக ஏற்படுவது தடுக்கப்பட்டது.

* மறுநாள் (14) பிரதமரை அழைத்துக்கொண்டு குருநாகல் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான ஹெட்டிப்பொல,, கொட்டம்பிட்டிய உள்ளிட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களான பண்டாரகொஸ்வத்த, மடிகே, அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொடுவ, கிணியன, பூவல்ல, அஸனாகொடுவ, கல்ஹினியாகடுவ போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, இனவாதக் கும்பல்களின் தாக்குதல்களுக்குள்ளான வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை நேரில் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினார். வன்செயல்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுத்தார், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்.

இவ்வாறான முஸ்லிம்கள் மீதான இனவாதத்தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளையும் தெளிவுபடுத்தினார். இனவாத வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட புத்தளம், கொட்டராமுல்ல பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றவூப் ஹக்கீம், அங்கிருந்தவாறே துருக்கி TRT WORLD செய்தி சேவைக்கு SKYPE மூலம் நேர்காணலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இவ்வாறு தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் கட்சி அரசியலுக்கப்பால் சமூகத்தின் அரசியல் தலைவன் என்ற அடிப்படையில் ஏனையவர்களையும் இணைத்துக்கொண்டு, மார்க்கத்தலைமைகளின் வழிகாட்டுதலுடன், தனது பணியை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போது, நாமனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

மாறாக, இவ்வாறு பணிகளை முன்னெடுப்பவர்களை அரசியல் காரணங்களுக்காகவும், அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்வுகளுக்காகவும் விமர்சிப்பது நியாயமில்லை.

மாறாக, இன்றைய சூழ்நிலையில் நாம் அரசியல் தலைமைத்துவங்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்களாக ஒரு போதும் இருக்கக்கூடாது.

No comments:

Post a Comment