எமது நாட்டில் சிறுபாண்மையினராக வாழும் முஸ்லிங்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்களின் போது நமது சமூகத்துக்காக குரல்கொடுக்கும் குரல்களை நசுக்கும் முகமாக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் இன்னோரன்ன இனவாத சதிகளை முறியடிக்க இறைவனின் அருள் கிடைக்க பிராத்திக்கும் துஆ பிரார்த்தனை நிகழ்வும் இப்தார் வைபகமும் நேற்று (01) மாவடிபள்ளியில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ முஸ்தபா ஜலீல் தலைமையில் நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான நோன்பாளிகளின் பங்கு பற்றுதலுடன் இப்தாருடன் துஆப்பிரார்த்தனையும் இனிதே நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அ.இ.ம.கா. கொள்கை பரப்பு செயலாளருமான அப்துல் ரஸாக் (ஜவாத்) மற்றும் உலமாக்கள், காரைதீவு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சிவானந்தராஜா, மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாயல் நிர்வாக சபை முக்கியஸ்தர்கள், பாடசாலையின் அதிபர்கள், காரைதீவு பிரதேச சபை உருப்பினர்களான கௌரவ ஏ.ஆர்.எம். ரணீஸ் , கௌரவ நேசராஸா, கௌரவ பூபாலரத்தினம், மாவடிப்பள்ளி அ.இ.ம.கா. அமைப்பாளர் ரஸாக் (ஜெமீல்), ஸ்ரீ.ல.மு.கா. அமைப்பாளர், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் புத்தி ஜீவிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல், இது ரிஷாட் என்ற தனி நபருக்கான பிரேரணையாக நினைத்து விட முடியாது. இது ஒட்டு மொத்த முஸ்லீம்கள் மீதும் அடிமை சங்கிலி இடுகின்ற ஒரு பிரேரணையே. இன்று ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிய கீழ்த்தரமானவர்கள் செய்த செயலுக்காக ஒட்டு மொத்த முஸலீம்களின் இருப்பிடத்தையும் இல்லாமல் செய்வதே இந்த இனவாதிகளின் குறிக்கோளாகும்.
எமது இனத்திற்காக குரல் கொடுக்கின்ற எமது தலைவர் ரிஷாட் பதியுதீன், ஆளுனர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் போன்றவர்களின் குரல் வளையை நசுக்க ஒரு சில நயவஞ்சகர் கூட்டம் துடிக்கின்றது. இவர்கள் அனைவரும் பதவி துறக்க வேண்டுமாம் என்று கூறி பிக்கு ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்து இருக்கின்றார்.
இன்று இவர்களுக்கு எதிராக எழுப்பப்படுகின்ற கோஷமும் ஆர்ப்பாட்டமும் வெற்றி பெற்றால் நாளை ஏனைய முஸ்லீம் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உருப்பினர்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களில் குதிக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருக்கின்றது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதே அவர்களின் இலக்கு.அதன் முதற்கட்ட காய் நகர்த்தலே எமது தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என்றார்.
ஹுதா உமர்
No comments:
Post a Comment