இரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் 09ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தத் தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதுடில்லியில் இந்திய ஊடகங்களின் செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'இந்தியப் பிரதமர் எப்போது இலங்கை வரவிருக்கின்றார்? எத்தனை நாட்கள் தங்கியிருக்கப் போகின்றார்? அவரது விஜயத்தின் முக்கிய நோக்கம் என்ன? அத்தோடு சீனா இலங்கை மீதான தமது ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?' என்று செய்தியாளர்கள் வினவினர். அதற்கு ஜனாதிபதி மைத்திரி பதிலளிக்கும்போது,
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மாலைத்தீவு விஜயத்தின்போதே இலங்கைக்கும் விஜயம் செய்யவிருக்கின்றார். எதிர்வரும் 09ஆம் திகதியே அவர் இலங்கைக்கும் விஜயம் செய்வதாகக் கூறியிருக்கின்றார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருப்பது பொருளாதார மற்றும் வர்த்தக உறவேயாகும். ஆகையால் பொருளாதார, வர்த்தக தொடர்புகளுக்குள் வேறொரு நாட்டின் வேறு விடயங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு இங்கே இல்லை. ஆகையால், இலங்கை அரசு இந்த விடயத்தில் பொறுப்புமிக்க வகையில் நடந்துகொள்ளும்" - என்றார்.
'இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் பயங்கரவாதம் பற்றிய விசாரணைகளுக்கு இந்தியாவின் உதவி தொடர்ந்தும் தேவையாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார். இது பற்றி நீங்கள் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடினீர்களா? சார்க் அமைப்பின் வளர்ச்சிக்கு பாகிஸ்தானின் நடத்தையே பெரும் தடையாக இருந்து வருகின்றது. இந்த அமைப்பில் இலங்கையின் பாத்திரம் எவ்வாறானதாக அமையும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?' என்று செய்தியாளர்கள் வினவியபோது,
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது எவ்வாறு எனக் கலந்துரையாடப்பட்டது. அதைத்தவிர நீங்கள் இங்கே கூறிய விடயங்கள் பற்றி இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லை.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது நடுநிலைக் கொள்கையாகவே இருக்கின்றது. அதன்மூலம் உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியில் செயற்படுவதே எமது கொள்கையாகும். அனைத்து நாடுகளையும் எமது நட்பு நாடுகளாகவே நாம் கருதுகின்றோம்.
அத்தோடு ஏதேனுமொரு இடத்தில் ஏதேனுமொரு பிரச்சினை ஏற்படும்போது அந்த நடுநிலைக் கொள்கைக்கேற்பவே நாங்கள் செயற்படுகின்றோம்" - என்று ஜனாதிபதி மைத்திரி பதிலளித்தார். `
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment