எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதுடில்லியில் இந்திய ஊடகங்களின் செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'ஜனாதிபதியே! இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறவுள்ளது? அந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடப் போகின்றீர்களா?' என்று செய்தியாளர்கள் வினவினர். அதற்கு ஜனாதிபதி மைத்திரி பதிலளிக்கும்போது,
"இவ்வருட இறுதியில் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு அவ்வாறு அறிவித்திருக்கின்றது. ஆகையால், தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கின்றது என்பதால் எதிர்க்கட்சியோ அல்லது ஆளுங்கட்சியோ எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை தமது கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்யவில்லை. ஆகையால், எனக்கு எவ்வித அவசரமும் இல்லாததால் ஏனைய கட்சிகள் தமது வேட்பாளரைத் தெரிவு செய்யும் வரை நானும் ஒரு முடிவுக்கு வராது காத்திருக்கின்றேன்" - என்றார்.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், "ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகின்றது. அப்படி ஒத்திவைக்கப்படாது. டிசம்பர் 7ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19ஆவது அரசமைப்பு திருத்தத்துக்கு முன்னர் தான் பதவியேற்றமை காரணமாக தனது பதவிக் காலத்தை 5 ஆண்டுகளையும் தாண்டி நீடிப்பது தொடர்பில் ஆலோசனைகளை நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment