ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளைஞர் அமைப்புகள் இணைந்து, தாக்குதல்களுக்கு வழிவகுத்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் ஒரு முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதோடு, பாராளுமன்றத்தில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த இளைஞர் அமைப்புகள் கடந்த வெள்ளிக்கிழமை (31) நடாத்திய ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்திருந்தன.
வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாகாணங்களிலிருந்து இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இளைஞர் சங்கங்கள் மற்றும் பல்வேறு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் இதில் இணைந்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையானது, அதிகாரத்தை மையமாகக் கொண்ட அரசியலால் முறியடிக்கப்பட்டு, வர்த்தக மற்றும் மதத் தலைவர்களிடையே நஞ்சை விதைக்கப்பட்ட மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகாரத்தை மையமாக கொண்ட அரசியலில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டாம் என, அனைத்து மதத் தலைவர்களிடமும் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என தெரிவித்து அவர்கள், அரசியல் நோக்கங்களுக்காக மதத் தலைவர்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்துவதாக, தெரிவித்தனர்.
பயங்கரவாதம் இலங்கையில் தாக்கம் செலுத்துவதற்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, இந்த சிக்கல்களை தீர்க்க நடைமுறைப்படுத்த குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
"மத ஸ்தலங்களின் மீதான தாக்குதல்கள், எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதிலிருந்தும் அரசாங்கம் விலகியிருக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம், "என இளைஞர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அரசியல் நன்மையை பாடுவோர் தொடர்பில் குறிப்பிட்ட அவர்கள், அரசியல் கட்சிகளும் குழுக்களும் பக்கச்சார்பான அரசியலை புறம் தள்ளி நாட்டின் நலனுக்காக வேலை செய்யுமாறு, இளைஞர்கள் இதன் போது வலியுறுத்தினர்.
மே 13 அன்று திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்கள் தொடர்பில் கேள்விக்குட்படுத்திய சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே, "இது மிக ஆழமாக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதேவேளை, பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முஸ்லிம்களுடன் கைகோக்க விரும்புவதாக இளைஞர்கள் அமைப்புகள் தெரிவித்ததோடு, "அனைத்து விதமான வன்முறைகளுக்கு எதிராகவும் வன்முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து இளைஞர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று அவர்கள் கூறினர்.
சிறுபான்மை குழுவினரால் மேற்கொள்ளப்படும் இனவாத பதட்டங்கள் முழு அளவிலான போருக்குள் இழுத்து செல்லாது என வடக்கில் உள்ள இளைஞர்கள் உறுதிப்படுத்துவதாக AFRIEL இளைஞர் வலையமைப்பை சேர்ந்த, ரவீந்திர டி சில்வா தெரிவித்தார். "தற்போது வடக்கில் உள்ள பல அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் எவரும், ஒரு யுத்தத்தை அல்லது யுத்தத்தை ஏற்படுத்துவதற்கோ உதவ முன்வரமாட்டார்கள்." என்று அவர் கூறினார்.
"வர்த்தக சமூகமானது, தங்களுக்குள்ளேயே புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்," என இளைஞர் அமைப்புக்கள் தெரிவித்தன. "வர்த்தக சமூகத்தின் ஒரு பகுதியை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்ட நச்சு பிரச்சாரம் ஆனது, தேசிய சமாதானத்தையும் ஒற்றுமையையும் தகர்த்தெறியும். இது போன்ற நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது மிக முக்கியமானதாகும். "என்று அவர்கள் கூறினர்.
கொள்கை வகுப்பில் இளைஞர்களை அதிக அளவில் இணைப்பது தொடர்பில் குரல் கொடுத்த அவர்கள், அடி மட்டத்தில் இருந்து இதனை கொண்டு வரவேண்டும் என தெரிவித்ததோடு, இச்செயல்முறையிலிருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக் காட்டினர். "கொள்கை சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர், மக்கள் கருத்துகள் கேட்டறியப்படாமை காரணமாக, பெரும்பாலும் புதிய கொள்கைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வற்ற நிலை ஏற்படுகின்றது. இதனை தீவிர போக்குடையவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதோடு, இதனால் பல்வேறு வதந்திகளும் பரவுகின்றன"என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
No comments:
Post a Comment