உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள், அதற்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் வட மேல் மாகாணம் உட்பட ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 2,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 1,665 பேர் பொலிஸ் அல்லது நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 211 பேர் CID, TID மற்றும் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 2,289 பேரில் 1,820 முஸ்லிம்களும் 330 சிங்களவர்களும் 139 தமிழர்களும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்,
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் முப்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதன் போதே 2,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூவினத்தவர்களும் அடங்குவர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம், அவசர கால சட்டம், சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடணத்திற்கு அமைய (ஐ.சி.சி.பி.ஆர்) மற்றும் தண்டணைக் கோவைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்;. இது தொடர்பான முழு விபரங்கள் பின்வருமாறு.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்ட 2,289 பேரில் 1,820 முஸ்லிம்களும் 330 சிங்களவர்களும் 139 தமிழர்களும் அடங்குவர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 423 பேரில் 358 முஸ்லிம்களும் 52 சிங்களவர்களும் 13 தமிழர்களும் அடங்குவர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்
211 பேர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் இவர்களில் 201 முஸ்லிம்களும் 9 சிங்களவர்களும் ஒரு தமிழரும் அடங்குவர். இவற்றில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் 68 பேரும், பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் 26 சந்தேக நபர்களும் அடங்குவர்.
பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள்
நீதிமன்றம் அல்லது பொலிஸ் பிணையில் இதுவரை 1,655 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,261 முஸ்லிம்களும் 269 சிங்களவர்களும் 125 தமிழர்களும் அடங்குவர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (PTA) கீழ் மொத்தமாக 575 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 537 முஸ்லிம்களும் 25 சிங்களவர்களும் 13 தமிழர்களும் அடங்குவர்.
அவசர கால சட்டத்தின் கீழ்
அவசர கால சட்டத்தின் கீழ் மொத்தமாக 213 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 141 முஸ்லிம்களும் 66 சிங்களவர்களும் 6 தமிழர்களும் அடங்குவர்.
ICCPR சட்டத்தின் கீழ்
சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்திற்கு அமைய (ICCPR) மொத்தமாக 72 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 26 முஸ்லிம்களும் 45 சிங்களவர்களும் ஒரு தமிழரும் அடங்குவர்.
தண்டனை கோவை சட்டத்தின் கீழ்
தண்டணைச் சட்டத்தின் கீழ் மொத்தமாக 1,429 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1,121 முஸ்லிம்களும் 188 சிங்களவர்களும் 120 தமிழர்களும் அடங்குவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment