“ஒரு மொழி தெரிந்தவன் ஒரு மனிதன். இரு மொழிகள் தெரிந்தவர்கள் இரு மனிதர்களுக்குச் சமனானவர்கள். ஒருவனுக்கு எத்தனை மொழிகள் தெரிகிறதோ அவன் அத்தனை மொழிகளுக்குச் சமனானவன்” என்ற ஓர் அறிஞர் வார்த்தையை நீண்ட காலங்களுக்கு முன்னர் எங்கேயோ படித்த ஞாபகம் உண்டு.
உலகத்தில் எந்த மொழிக்குரியவனாக ஒரு முஸ்லிம் எந்தத் தேசத்தில் வாழ்ந்தாலும் அவனோடு பின்னிப் பிணைந்தது அறபு மொழி. காரணம் அல் குர்ஆனின் மொழி அது. குறைந்தது, புரியாவிடினும் குர்ஆனை ஓதும் அளவு அவன் கற்றாக வேண்டிய மொழி அது.
மொழி என்பது ஒருவனது அடையாளம் என்பது மட்டுமல்ல, அது எண்ணப் பகிர்வுக்கான ஊடகமும் கூட.
புதிதாக பெரும்பான்மை இனத்து்க்கும் ஒரு சில தமிழ் சகோதரங்களுக்கும் அறபு மொழி மீது ஒரு கோபம் எழுந்திருக்கிறது. இது உண்மையில் மொழி மீதான கோபம் அல்ல, முஸ்லிம்கள் மீதான வெறுப்பின் வெளிப்பாடு.
அறபு மொழியைக் கற்குமாறு இலங்கையில் வாழும் எந்த ஒரு முஸ்லிமும் வேற்று இனத்தார் யாரையும் வற்புறுத்தாத நிலையில் “அறபு மொழி கற்பிக்கிறார்கள்” என்று கோஷம் எழுந்திருக்கிறது.
இலங்கையில் முஸ்லிம்கள் வாழத் தொடங்கிய காலந்தொட்டு அல் குர்ஆனை ஓதுவதற்காக முஸ்லிம்களுக்கு அறபு மொழி கற்பிக்கப்படுகிறது. பொருளுணர்ந்து கற்பிப்பதே அறபு மத்ரஸாக்களின் பணி. நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் அறபு மொழி ஒரு பாடமாக இருந்தது.
அறபு தேசங்களுக்குப் பணிப்பெண்களாகச் செல்வோருக்கும் அடிப்படை அறபு மொழி கற்பிக்கப்படுவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். அப்படிச் சென்று வந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நேரே நின்று அறபி மொழியைக் கற்றவர்களால் கூடப் பேச முடியாது.
காரணம், மத்தி கிழக்கில் அறபுப் பேச்சு மொழி நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறு படுகிறது. நம்மவர்கள் கற்றிருப்பது அசல் மொழி.
எனவே இதனால் எந்தவகையிலும் யாருக்கும் பாதிப்புக் கிடையாது.
அஸ்ரப் சிஹாப்தீன்
கவிஞரும், நாடறிந்த எழுத்தாளரும்.
No comments:
Post a Comment