ரிஷாட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க கோடிக்கணக்கில் பணம் கைமாறு - மஹிந்தானந்த அளுத்கமகே - News View

About Us

About Us

Breaking

Thursday, May 30, 2019

ரிஷாட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க கோடிக்கணக்கில் பணம் கைமாறு - மஹிந்தானந்த அளுத்கமகே

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க, சில தரப்பினருக்கு கோடிக்கணக்கிலான பணம் கைமாற்றப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க தற்போது கோடிக்கணக்கிலான பணம் கைமாற்றப்படுவதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. இதற்காக சிலருக்கு பெரிய தொகைகள் வழங்கப்படுகிறது.

இதனை நாடாளுமன்றில் கூறியபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மௌனமாக இருந்தார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின், நிரோஷன் பெர்ணான்டோ மட்டும்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவும் இதுதொடர்பிலான தனது முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்றும் உறுதியாக இருந்தார்.

இந்த அரசாங்கம் விரைவில் கவிழவுள்ளதாகவும் எனவே, அரசாங்கத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் உள்ளிட்ட குழுவினரால் தற்போது பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு முன்னர், ஜே.வி.பி. யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்கிலேயே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார். அவருக்கு இதுதொடர்பில் தற்போது கருத்தொன்றைக்கூட வெளியிடமுடியாமல் போயுள்ளது.

எனவே, அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment