சிங்கள இனவாதிகள் சாதாரண சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி முஸ்லிம்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சகலருக்கும் சட்டத்தை நியாயமாக நிலைநாட்ட வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 30, 2019

சிங்கள இனவாதிகள் சாதாரண சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி முஸ்லிம்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சகலருக்கும் சட்டத்தை நியாயமாக நிலைநாட்ட வேண்டும்

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றாது பிரச்சினைகளை வேறுபக்கத்துக்குத் திசைதிருப்ப ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.

தெரிவுக்குழுவின் முதல்நாள் அமர்வில் பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. தொடர்ந்தும் நடத்தப்படும் விசாரணைகளில் பல்வேறு உண்மைகள் புலப்பட்டு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார் என்பது தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

அலரி மாளிகையில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முஜிபுர் ரஹ்மான் எம்.பி இந்தத் தகவல்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனினும், பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல உண்மைகள் புலப்படத் தொடங்கியுள்ளன. 

பெப்ரவரி 19ஆம் திகதிக்குப் பின்னர் குண்டுத் தாக்குதல் நடைபெறும் வரை பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை. குண்டுத் தாக்குதல் பற்றி 12 நாட்களுக்கு முன்னர் உயர்மட்டத்துக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக அரசாங்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் அரசு மீது குற்றஞ் சுமத்திய எதிர்க்கட்சியினர் ஏன் இந்த விவகாரம் தொடர்பில் மௌனம் காக்கின்றனர். மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட சாரைப்பாம்புபோல அடங்கிப் போயுள்ளனர். சஹ்ரானை கைது செய்வதற்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவிருந்த நாளக்க.டி.சில்வா கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றிருந்தார். 

எனினும், சஹ்ரானை கைது செய்யவிடாது எங்கோவிருந்த நாமல் குமார என்ற நபரின் குற்றச்சாட்டின் பேரில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கைது செய்யப்பட்டார். இதனால் கடந்த செப்டெம்பர் மாதத்தின் பின்னர் சஹ்ரான் தொடர்பான விசாரணைகள் முன்நகர்த்திச் செல்லப்படவில்லை. இதன் பின்னணியில் ஜனாதிபதி இருக்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது.

தெரிவுக்குழுவில் புலப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தயாரில்லாத எதிர்க்கட்சியினர், எங்கோவிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளனர். 

பொறுப்புக் கூறவேண்டியவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தாது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கருத்துக்களையே அவர்கள் பரப்பி வருகின்றனர். இதனால் சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கும் திசையை நோக்கி பிரச்சினைகளை அவர்கள் திருப்புகின்றனர்.

1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் பின்னர் நாட்டிலிருந்த தமிழ் புத்திஜீவிகளை நாட்டைவிட்டு அனுப்பியதைப்போன்று தற்பொழுது முஸ்லிம் புத்திஜீவிகளை நாட்டைவிட்டு அனுப்புவதற்காக முயற்சிக்கின்றனர். இது விடயத்தில் ஜனாதிபதி மெளனம் காத்துவரும் நிலையில் அவர் பின்னணியில் இருக்கிறாரா எனக் கேட்க விரும்புகின்றோம்.

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 150 பேர் மாத்திரமே இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார். எனினும், ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் சமூகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அப்பாவிப் பொதுமக்களே அதிகமானவர்கள். 

மறுபக்கத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்திய சிங்கள இனவாதிகள் சாதாரண சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சகலருக்கும் சட்டத்தை நியாயமாக நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment