வறுமையில் வாழ்பவர்களுக்கு நிவாரணமளிப்பதற்காக 1990 ஆம் ஆண்டு முதல் சமுர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போது 14 இலட்சமாக அதிகரித்துள்ளது. அவ்வாறெனின் வறுமை அதிகரித்து வருகின்றதென்றே பொருள்படும். சமுர்த்தி கொடுப்பனவுகள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதே இதற்கு காரணமாகுமென பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், சமுர்த்தி வழங்குவதில் இடம்பெற்றுவரும் ஊழல் - மோசடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சமுர்த்தி வழங்குகின்றோமென்ற பேரில் 3000 இலட்சத்தை நாசமாக்கும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் என்றால் அரசுக்கு எதிராக நடந்துகொள்வதும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதைதான் செய்து வந்தன. நாட்டின் எதிர்காலமும், தேசிய பாதுகாப்பும் தான் எமக்கு தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.
அதன் அடிப்படையிலேயே தேசிய பாதுகாப்புக்குத் தேவையான சட்டத்திருந்தங்களை மேற்கொள்வதற்கு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம். அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிதான் சட்டத்திருத்தங்களுக்கான யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
இரவு, பகல் பாராது சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளையும், கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றோம். குறித்த பனிரெண்டு மாத காலத்துக்குள் நிறைவேற்றிக்கொள்ளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இதன் காரணமாக நாம் அரசாங்கத்துக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக காட்ட முற்படக்கூடாது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான விடயங்களை செய்வதுடன் மறுபுறம் அரசாங்கம் செய்யும் தவறுகளையும், ஊழல்களையும் வெளிப்படுத்தி வருகின்றோம்.
6 இலட்சம் பேருக்கு சமுர்த்தியை வழங்குவதற்கு அரசாங்கம் முற்படுகிறது. ஐ.தே.கவின் உறுப்பினர்களுக்கு மாத்திரம்தான் இவ்வாறு சமுர்த்தி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகிறார். இதுதான் நல்லாட்சியா? அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் வழங்குவதென்றால் ஆதரவளிப்போம்.
சமுர்த்தி வழங்கும் செயற்பாட்டில் பாரிய ஊழல்கள் இடம்பெற்று வருகின்றன. 3000 இலட்சம் அரச நிதியை நாசமாக்கும் செயற்பாட்டை செய்கின்றனர். 7 இலட்சம் ரீசேட்களை வழங்கவுள்ளனர். இவ்வாறு பணத்தை நாசமாக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். உரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம்.
வறுமையில் வாழ்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் முகமாக 1990 ஆம் ஆண்டு முதல் சமுர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 14 இலட்சமாக அது அதிகரித்துள்ளது. அவ்வாறெனின் வறுமை அதிகரித்து வருகின்றதென்றே பொருள்படும். சமுர்த்திகள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதே இதற்கு காரணமாகும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment