சிறந்த சேவைகள், அபிவிருத்திகளை எதிர்பார்த்தே, மக்கள் தம்மிடம் ஆட்சி, அதிகாரத்தை ஒப்படைப்பதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனகம்வெஹெரை பிரதேச செயலகப் பிரிவில் பஹலமத்தலையில் 68 வீடுகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட 192 வது உதாகம எத்ரஜகம மாதிரிக் கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறுதெரிவித்தார்.
மீள் எழுச்சிபெறும் கம்உதாவ சகலருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் இக்கிராமம் நிர்மாணிக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது.
அரச அதிகாரம் என்பது மிகவும் பெறுமதிமிக்கது. நம்பிக்கையின் அடிப்படையிலே மக்கள் வாக்களித்து எம்மைத் தெரிவு செய்கின்றனர். ஊழல், மோசடிகளில் ஈடுபடமாட்டோம் என, நம்பியே பொதுமக்கள் அரசியல்வாதிகளை நாடி வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுப்பது எமது கடமையாகும்.
இந்தக் காணி உரிமை பெற்றவர்களுக்கு எம்மால் ஏதாவது நன்மைகள் கிடைத்துள்ளதா எனச் சிந்தித்துப் பாருங்கள். இன்று உங்களுக்கு இலவசமாகக் கிடைத்த இந்தக்காணிகள் கோடிக் கணக்கான ரூபா பெறுமதி வாய்ந்தவை.
எத்ரஜகம மாதிரிக் கிராமத்தை நான் வரலாற்று சிறப்புமிகு கிராமமாகக் கருதுகிறேன். இந்தகிராமம் அமையப்பெற்றுள்ள காணி உட்பட இங்குள்ள காணி வளங்களை தலைநகரிலுள்ள கோடீஸ்வரர்களுக்கு பகிர்ந்தளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
காணிக் கொள்கையைப் பின்பற்றி இந்தக் காணிகளை திட்டமிட்ட அடிப்படையில் தேவையான விதத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம். இப்பிரதேச மக்களின் காணி வளங்களை தலைநகரிலுள்ள கோடீஸ்வரர்களுக்கு கைமாற்றும் சிலரின் திட்டங்களைத் தோற்கடிக்கவே, இந்த மாதிரிக் கிராமத்தை நிர்மாணித்தோம்.
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது கோடீஸ்வரர்களைப் பாதுகாப்பற்கா? காணிகளை ஆட்சியாளர்களுக்கு கொள்ளையிட்டு வழங்குவதற்கா? இவ்வாறு நிகழ்வதற்கு இடம் வழங்கக்கூடாது.
எமது நாட்டில் வறுமையில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு இன, மத மற்றும் மொழி பேதங்களின்றி காணிகளை பகிர்ந்து வழங்குவதே எனது நோக்கமாகும். நாம் இந்தக் காணிகள் அனைத்தையும் எவ்வித பேதங்களின்றி மக்களுக்காக பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டை நிருபர்
No comments:
Post a Comment