தேர்தலை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்காக சுதந்திரக் கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுமென அதன் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தேர்தலுக்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர கட்டியெழுப்பியுள்ள மாபெரும் கனவுக் கோட்டையை நனவாக்குவது யதார்த்தமல்லவென்றும் அவர் குறிப்பிட்டார்.
வறுமையில் வாழும் 06 இலட்சம் பேருக்கு புதிதாக சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் இந்த அரசாங்கத்தின் கீழ் 06 இலட்சம் மக்கள் வறுமையில் வாழ்வது அம்பலத்துக்கு வந்திருப்பதாக சுட்டிக்காட்டிய தயாசிறி எம்.பி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன நடந்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த அரசாங்கம் 365 பில்லியன் ரூபாவை வருமானமாக தேடவுள்ளதன் மூலம் நாட்டு மக்கள் நாளொன்றுக்கு ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
மலையக மக்களுக்கு புதிய கனவுலகத்தை நிதி அமைச்சர் காட்டியுள்ளபோதும் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி திட்டவட்டமாக குறிப்பிடப்படாமை பெரும் ஏமாற்றம் அளித்துள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் முற்றிலும் தேர்தலை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்டது. அதில் அவர் வெறும் கனவுலகத்தையே மக்களுக்கு காட்டியுள்ளார்.
ஆனால் அவை அத்தனையையும் நனவாக்குவது யதார்த்தமல்ல. தேர்தலை இலக்கு வைத்து தயாரிக்கும் வரவு செலவுத் திட்டத்தின் அபிவிருத்திக்கு இடமிருக்காது. அதைப்போன்றுதான் இம்முறை வரவு செலவுத் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடன் வட்டி வீதம் 14 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளையே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அரிசிக்கு நிலையான விலையை இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கூடாக அறிமுகம் செய்திருக்கலாம்.
கடந்த வருடம் கல்வி அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாவில் 08 ஆயிரம் மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது. எஞ்சிய 22 ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தில் கை வைக்கப்படவில்லை. அண்மையில் கைது செய்யப்பட்ட புளுமண்டால் சங்க தான் 438 கிலோ ஹெரோயினை விற்பனை செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அக்காலத்தில் பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதிக்கு கீழ் இருக்கவில்லை. ஜனாதிபதி வெகு அண்மையிலேயே பொலிஸ் திணைக்களத்தை பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்தே போதையொழிப்பு நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தயாசிறி எம்.பி தெரிவித்தார்.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment