ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு குறித்து இலங்கை அரசாங்கம் நிகழ்ச்சி நிரலை வழங்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் போர் முடிவடைந்து 10 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமையானது நீண்ட கால பாதிப்புக்களுக்கு வழியை ஏற்படுத்திவிடும் எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக உலக தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தம் முடிவடைந்ததில் இருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிறது. இதன் காரணமாக தமிழ் சமூகம் மிகவும் ஆழமான தாக்கத்தை அனுபவித்தது. குறிப்பாக கொலை, இடம்பெயர்வு மற்றும் வலிந்து இடம்பெயர வைத்தல் போன்ற சம்பவங்களில் இருந்து ஒரு குடும்பம் கூட பாதிக்கப்படாமல் இல்லை.
போரின் இறுதிக்கட்டத்தில் பல்வேறுபட்ட துயர சம்பவங்கள் அரங்கேறியது. அதனை மறைக்க இலங்கை அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் யுத்த முடிவு முடிந்தபின், காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் அனைத்தும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அறிக்கைகள் ஆகியன மூலம் வெளிச்சத்திற்கு வந்தன.
குறிப்பாக முறைகேடான வன்முறைகளான, போர்க்காலத்தில் சரணடைபவர்கள், மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான பகுதிகளில் கண்மூடித்தனமாக ஷெல் வீச்சு தாக்குதல், மனிதாபிமான உதவிகள் மறுப்பு என்பன இடம்பெற்றன.
இதன்போது பொதுமக்களை பாதுகாப்பதற்காக 2009 ல் ஐ.நா. மோசமாக தோல்வி அடைந்த போதிலும், இந்த தோல்வியைத் தீர்க்கும் வகையில் அவர்கள் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
இந்த நிலையில் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகள் 30/1 மற்றும் 34/1 ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக விதிவிலக்கு இன்றி இணை அனுசரணையாளராக இருந்து நிறைவேற்ற இலங்கை உடன்பட்டது.
எனினும் இன்னும் இலங்கை அரசாங்கம் தமது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சர்வதேச நியம சட்டம் ஒன்று கொண்டு வரப்படவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்ட போதும் அது நீதி நடைமுறைகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் இணைக்கப்படக்கூடாது என்று தொடர்ந்தும் இலங்கையின் அரசாங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் இணை அனுசரணையில் இருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுப்பதாக கூறப்படும் முயற்சிகளும் உண்மைகளை கூறி இரண்டு தரப்பும் மன்னிப்பை கோரவேண்டும் என்ற நிலைப்பாடு பயங்கரமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
போர்க்குற்ற விசாரணைகளை தடுத்து சர்வதேசத்தின் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளாகவே இந்த முயற்சிகள் அமையும்.
எனவே புதிதாக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை நிறைவேற்ற எடுக்கும் காலம் தொடர்பான செயல்திட்டத்தினை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். அத்தோடு அதனை நடைமுறைப்படுத்துவதை சிறப்பு அறிக்கையாளர் அல்லது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் கண்காணிக்கப்படவேண்டும்” எனவும் உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment