சூட்டி புத்தா என்று அழைக்கப்பட்ட யானைக் குட்டியை சட்டவிரோதமாக தனது விஹாரையில் வைத்திருந்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து உடுவே தம்மாலோக்க தேரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேரரை விடுவித்து யானைக் குட்டியை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரதிவாதியான தேரர் குறித்த யானைக் குட்டியை தனது விஹாரையில் வைத்திருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகள் அனைத்தையும் நிரூபிப்பதற்கு முறைப்பாட்டாளர்களுக்கு இயலாது போனது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக இதன்போது சட்ட மா அதிபர் சார்பாக ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த யானைக் குட்டி கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி உடுவே தம்மாலோக்க தேரர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர் 2016 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபரால் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment