தேசிய ரீதியாக ஒரு தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும். எனவே வருகிற அரசியல் மாற்றம் என்பது நமது சமூகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாத மாற்றமாக வர வேண்டுமாக இருந்தால் எமது அணுகுமுறையிலேயே தங்கியிருக்கும். இது தொடர்பில் திறந்த ஒரு கலந்துரையாடல் அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்ஃ
அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் புணருத்தாபனம் செய்யப்பட்ட அனுராதபுரம் மொஹிதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள வீதியின் திறப்பு விழா வைபவம் கடந்த சனிக்கிழமை (02) அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது. இதன் பின்னர் பள்ளிவாசல் நிருவாக்கத்தினர் CTC கேற்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த அமைச்சருக்கான பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அனுராதபுர மாநகர சபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அல்-பாரிஸ் அவர்களின் வெற்றியின் பின்னணியில் மதிக்க தக்க பங்களிப்பினை இங்கு வாழ்கின்ற சிங்கள சகோதரர்கள் செய்திருக்கின்றார்கள் என்பதனை நன்றியோடு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
ஐக்கிய தேசிய முன்னணியில் பிரதான பங்காளிக் கட்சியாக இருக்கின்றவர்கள் என்கிற வகையில் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவருக்கும் அவர்களது சின்னத்திலேயே போட்டியிடும் சந்தர்ப்பம் கிடைக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக எங்களது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அதனால்தான் எங்களுக்கு தனித்து போட்டியிட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகளின் பின்னர் தான் இங்குள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு தொகுதியை போட்டியிட தந்திருக்க வேண்டும் என்கின்ற உண்மை விளங்கியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதன் மூலம் அனுராதபுர மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆசனங்களை இழக்கும் என்று அவர்கள் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை. ஆனால் அதுதான் நடந்தது.
மாநகர சபை உறுப்பினர் அல்-பாரிஸ் அவர்களின் தந்தை இந்த கட்சிக்காக கட்சியின் ஆரம்ப காலம் தொட்டு அயராது பாடுபட்டவர். அவரது மறைவுக்கு பின்னர் அந்த வெற்றிடத்தை பாரிஸ் நிரப்புவது சந்தோசமான விடயமாகும். ஆரம்ப காலங்களில் பிழையான புரிதல்களினால் எமது கட்சி தொடர்பில் இனவாத சாயம் பூசப்பட்டு கடுமையாக எமது கட்சியை விமர்சிக்கின்ற நிலை இருந்தது. இவ்வாறான காரணங்களினால் 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் எமக்கு ஆசனம் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. அந்த தேர்தலில் எங்களது தேர்தல் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. எனவே தென்னை மரத்தை சின்னமாக்கி நாங்கள் போட்டியிட்டோம்.
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அனுராதபுரத்தில் முதலாவது ஆசனம் கிடைத்தது. எங்களது உறுப்பினராக ஏ.சி.ராவுத்தர் நெய்னா முஹம்மத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கு முறைகள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிநியாக அனுராதபுர மாவட்டத்திற்கு பரவலான சேவைகளை செய்து எமது கட்சியின் ஸ்தீர தன்மையை நிறுவினார்.
தொடர்ந்தும் பாதுகாத்து வந்த மாகாண சபை பிரதிநிதிதித்துவம் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது கைநழுவிப் போனதனால் எமது கட்சிக்கு இம்மாவட்டத்தில் சிறுது காலம் பின்னடைவு ஏற்பட்டது. எனவே கட்சியை மீண்டும் கட்டியெழுப்புகின்ற தேவை எமக்கு இருந்தது. தற்போது பெரும்பான்மை சிங்கள மக்களும் எம்மையோடு இந்த பயணத்தில் கைகோர்த்துள்ளனர். அவர்களின் இந்த இணைவினை நாம் சந்தோசமாக வரவேற்கின்றோம்.
பௌத்த தர்மத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுகின்ற இந்த பிரதேசத்தில், எம்மை புரிந்து கொண்டு எமது கட்சியோடு இணைந்து பயணிக்க சிங்கள சகோதர்கள் விரும்புகிறார்கள். புதிய இலக்கோடு பயணிக்கின்ற எமது கட்சி ஒரு இனத்திற்காகவோ அல்லது மதத்திற்காகவோ என்று செயற்படாமல் பரவலாக யார் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சார்பாக உரத்து குரல் கொடுக்கின்ற கட்சியாக மாறவேண்டிய தேவை இருக்கிறது. அதனால் தான் வரலாற்றுப் புகழ்மிக்க அனுராதபுர நகர சபைக்காக சிங்கள சகோதரர்களின் ஒத்துழைப்போடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் பாரிஸ் தெரிவாகினார் என்பதை மகிழ்ச்சியோடு இங்கு பதிய விரும்புகிறேன்.
இன்று நாச்சியாதீவில் நடைபெற்ற கூட்டத்திற்கு திறப்பனை பிரதேச சபைக்குற்பட்ட அதிகமான சிங்கள சகோதர்கள் வந்திருந்தார்கள். அதிலே நான்கு சிங்கள கிராமங்களின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கான மகளிர் அணி அமைக்கப்பட்டு அதன் அங்கத்தவர்களும் வந்திருந்தார்கள். என்னோடு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைத்தார்கள், அவர்களுக்கு தெளிவான இலக்கு இருக்கின்றது. அந்த கூட்டத்திற்கு பெரும் தொகையான பௌத்தர்கள் வந்திருந்தமையானது இந்த பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மீள் எழுச்சியை உறுதி செய்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் மாற்று மதத் தவர்களையும் இணைத்து கொண்டு பயணிக்கிறது என்ற சந்தேகம் இதன் போது முஸ்லிம் சகோதரர்களுக்கு ஏற்படும். ஆனால் இஸ்லாம் மதமானது ஒரு முழு மனித சமூகத்திற்கும் பொதுவானது. அனைவரையும் இணைத்துக் கொண்டு செயற்படுவதையே இஸ்லாம் விரும்புகின்றது. அவ்வாறே எமது கட்சியும் எல்லா சமூகத்தினரையும் இணைத்து செயற்பட விரும்புகிறது. அதனைத்தான் எமது மறைந்த தலைவரும் விரும்பினார்கள்.
இந்த கட்சியை ஆரம்பிக்கின்ற போது வடக்கில் ஒரு நெருப்பு தெற்கில் இன்னொரு நெருப்பு எரிந்து கொண்டிருந்தன. இந்த இரண்டு நெருப்பு மலைகளையும் கடந்தே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரதான இரண்டு கட்சிகளினதும் நெருக்குதல்களை சமாளித்து இன்று ஒரு சக்தியாக நாங்கள் வளர்த்துள்ளோம். எந்த வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சார்பாக துணிவுடன் குரல் கொடுக்கின்ற ஒரு கட்சியாக நாங்கள் வளர்ந்துள்ளோம். இந்த வளர்ச்சியானது முஸ்லிம் சமூகத்தை போலவே ஏனைய சமூகத்தினதும் ஒத்துழைப்பின் பலனாகவே நிகழ்ந்தது.
எமது மறைந்த தலைவரின் எண்ணக்கருவில் உதித்த விடயம் தான் எல்லா சமூகங்களையும் இணைத்து செயற்படுகின்ற "தேசிய ஐக்கிய முன்னணி" இந்த கொள்கையை நிலைநாட்டுவதில் பின்னடைவு கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்தாலும் மீண்டும் அதனை உயிர்ப்பித்து எல்லா சமூகங்களையும் இணைத்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், உலமா காங்கிரஸ் என்பவற்றை உருவாக்கி எமது அரசியல் பயணத்தை, விரிவு படுத்த வேண்டும்.
இந்நிகழ்வில் வட மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.சி.ராவுத்தர் நெய்னா முஹம்மத், அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல், அனுராதபுர மாவட்டத்தின் நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் சுதத் ரத்நாயக்க, அமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.பர்வீன், பிரதேச சபை உறுப்பினர்களான ரபீக், நபீஸ், யாசீர் மற்றும் ஏ.ஏ.எம். ரஸ்கான் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment