வைராக்கியம் கொண்டு உயர் கல்வியைத் தொடர்ந்தால் வெற்றி பெறலாம் - பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் - News View

About Us

About Us

Breaking

Monday, March 11, 2019

வைராக்கியம் கொண்டு உயர் கல்வியைத் தொடர்ந்தால் வெற்றி பெறலாம் - பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத்

எச்.எம்.எம்.பர்ஸான்
உயர் தரத்தில் கல்வியைத் தொடரவுள்ள மாணவ, மாணவிகள் வைராக்கியம் கொண்டு தங்களுடைய கல்வியைத் தொடர்ந்தால் வாழ்வில் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் தெரிவித்தார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதி பெறுபேறுகளை எதிர்பார்த்திருக்கும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் உயர் கல்வியை எத்துறையில் தொடர்வது பற்றி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கும் விசேட சந்திப்பொன்று அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில், உயர் கல்வியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் அரசாங்கத்தினால் குறைவாக வழங்கப்படுவதினால் தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது கல்வியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றது

எனவே உங்கள் உள்ளத்தில் வைராக்கியம் வந்திடுமாகவிருந்தால் எதை இழந்தாலும் நீங்கள் ஒரு விடயத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருப்பீர்கள் அது நல்லவையாக இருந்தாலும்தான் தீயவையாக இருந்தாலும்தான் ஏனென்றால் அவ்வாறான சிந்தனைகள் கொண்ட வயதில்தான் நீங்கள் உள்ளீர்கள்.

எனவே நீங்கள் இப்போது வைக்க வேண்டிய வைராக்கியம் என்னவென்றால் நான் கல்வி கற்று நல்லதொரு நிலைக்குச் செல்ல வேண்டும், பல்கலைக்கழகத்தின் பெறுமானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வைராக்கியம் வைத்துக் கொள்ள வேண்டும்.

உயர்தரக் கல்வியென்பது கூடுதல் மாணவச் சமூகத்தின் முயற்சியிலேயே தங்கியுள்ளது. உயர்தரத்தில் எந்தத் துறையினை தெரிவு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மாணவிகளாகிய நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
உயர்தரத்தைப் பொறுத்தவரை அனைத்துத் துறைகளும் நல்ல துறைகள்தான் அதில் விஞ்ஞானம்தான் நல்லது கலைப்பிரிவு மோசம், வர்த்தகப் பிரிவு மோசம் என்றில்லை நீங்கள் இலங்கையில் எங்கு பார்த்தாலும் கூடுதலாக நிருவாக கடமைகளிலுள்ள பிரதேச செயலாளர்கள், சட்டத்தரணிகள் நீதிபதிகள் என பல்வேறு உயர் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளவர்கள் கலைப் பிரிவைக் கற்றவர்கள்தான். 

அது மாத்திரமல்லாமல் நாட்டின் திட்டங்கள் மற்றும் அரசியால் திட்டங்களையெல்லாம் இவ் கலைப் பிரிவில் கல்வி கற்றவர்கள்தான் வகுக்கின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . அதே போன்றுதான் வர்த்தகத்துறையும் காணப்படுகின்றது அது உலகில் கூடிய வருமானம் ஈட்டக்கூடிய துறையாகக் காணப்படுகின்றது.

எனவே நீங்கள் எந்தத் துறையைத் தெரிவு செய்தாலும் அவை அனைத்தும் நல்ல துறைகள்தான் அதில் எதனை தெரிவு செய்ய வேண்டும் என்பது பற்றி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

அத்தோடு இஸ்லாமியப் பண்புகளோடும் நல்ல பழக்கவழக்கம் கொண்ட மாணவ சமூகமாகவும் நீங்கள் மிளிர வேண்டும். நண்பர்களின் கதை கேட்டு உங்களது வாழ்க்கையை வீணாக்காமல் வாழ்வில் சாதித்து வெற்றிபெற வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.யூ.எம்.முகைதீன், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஏ.ஆர்.முகைதீன் மற்றும் உயர் தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment