மன்னார் - மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக மீண்டும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வலியுறுத்தியுள்ளார்.
மன்னார் - மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில், தெரிவு செய்யப்பட்ட 6 மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில், 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”மன்னார் புதைகுழியின் முக்கியத்துவம் கருதி, இரண்டாவது ஆய்வு ஒன்றை மேற்கொள்வது அவசியமாகும்.
புளோரிடாவில் உள்ள ஆய்வகம், மனித எச்சங்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபடவில்லை. எனவே, எப்படி அந்தப் புதைகுழி வந்தது என்பதை கண்டறியும் வகையில், மேலதிக ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
போரின்போது பெருமளவு மக்கள் காணாமல் போயுள்ளனர். எனவே மனித புதைகுழி அகழ்வை விரிவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண மற்றுமொரு நாட்டில் மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
புதைகுழி அகழ்வு மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதை கூட்டமைப்பு வலியுறுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment