பாகிஸ்தான் இராணுவத்தினர் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள் : அபிநந்தன் தெரிவிப்பு - News View

About Us

Add+Banner

Saturday, March 2, 2019

demo-image

பாகிஸ்தான் இராணுவத்தினர் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள் : அபிநந்தன் தெரிவிப்பு

D0luOYHXQAUf5VS
பாகிஸ்தான் இராணுவத்தினர் தம்மை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் என்றும் அவர்கள் நடத்தை மிகவும் தொழில் முறையுடன் இருந்ததாகவும் இந்திய விமானி அபிநந்தன் கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறும் காணொளியை பாகிஸ்தான் ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

அந்தக் காணொளியில், தாம் ஓட்டி வந்த விமானம் சுடப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கோபமாக இருந்த மக்கள் கூட்டத்திடம் இருந்து தம்மை மீட்டதாகவும் அபிநந்தன் குறிப்பிட்டுள்ளார். நேற்று (01) இரவு இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தரப்பால், வாகா - அட்டாரி எல்லையில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட உடனேயே அபிநந்தனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியத் தலைநகர் டெல்லியில் இராணுவ அதிகாரிகள் அவருக்கு நடந்தவை குறித்து கேட்டறிந்தனர். இந்த வார இறுதியில் அவர் குடும்பத்தினரிடம் மீண்டும் இணைக்கப்படுவார் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தானில் உள்ள இலக்குகள் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு பின்னர் காணவில்லை என்று புதன்கிழமையன்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக அவர் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் கூறி, அவரது காணொளியை வெளியிட்டிருந்தது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீர் கேட்கின்ற விமானியின் முதல் காணொளியை வெளியிட்ட பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம், பின்னர் அதனை நீக்கிவிட்டது.

அதில் தன் பெயர் மற்றும் பணி விபரங்களைக் கூறிய அபிநந்தன், தாம் பாகிஸ்தான் இராணுவத்தின் வசம் உள்ளேனா என்று அறிந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்.

பிந்தைய காணொளியில் குவளையில் இருந்து தேனீர் குடித்துக் கொண்டிருப்பது போலவும், கண்கள் கட்டப்படாமல், முகம் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் அபிநந்தன் காட்டப்பட்டார்.

அந்த காட்சியில் சாதாரண உடையில் தேநீர் கோப்பையுடன் அபிநந்தன் உள்ளார். தன்னை பாகிஸ்தான் இராணுவம் மரியாதையாக நடத்துவதாகக் கூறுகிறார். அவரிடம் அவரது சொந்த ஊர் குறித்தும், இராணுவ இலக்கு குறித்தும் கேட்கிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் அவர், “என் சொந்த ஊரைப் பற்றிக் கூற எனக்கு அனுமதியில்லை. இந்தியாவின் தெற்கு பகுதியை சேர்ந்தவன், இலக்கு குறித்து கூற முடியாது,” என்கிறார்.

அமைதி நோக்கத்துடன் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று வியாழனன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படும்போது அவரை வரவேற்க ஏராளமான இந்தியர்கள், இந்தியக் கொடி, இசைக் கருவிகள் உள்ளிட்டவற்றுடன் அட்டாரி பகுதியில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BBC

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *