நாடு தழுவிய ரீதியில் புதன்கிழமை (13.03.2019) இடம்பெறும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண ஆசிரியர்கள், அதிபர்கள் கறுப்புப்பட்டியுடன் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால்களும், கடையடைப்புக்களும் நடைபெறுகின்றன.
அதனால் எமது போராட்டத்தை சற்று வித்தியாசமாகக் குறித்துக்காட்டும் வகையில் கறுப்புப்பட்டியணிந்து நாம் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தி விட்டு அன்றைய தினம் கறுப்புப்பட்டியுடனேயே கற்பித்தல் கடமைகளைச் செய்யவிருக்கின்றோம்.
குறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்களின் வேதனங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், அவசியமற்ற சுமைகள் நீக்கப்பட வேண்டுமெனவும், மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லையெனவும் நாம் இதற்கு முன்னர் பல போராட்டங்களை முன்னெடுத்த போதும், எந்தப் பயனும் இதுவரை கிட்டவில்லை.
ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பளத்தை அதிகரித்தல், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றுதல், மொத்தத் தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்குதல் ஆகிய மூன்று அம்சங்களடங்கிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் இப்போராட்டத்தை புதன்கிழமை (12.03.2019) முன்னெடுக்கவுள்ளனர்.
இப்போராட்டத்தை மாணவர்களும், பெற்றோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்குச்சென்று கைகளில் கறுப்புப்பட்டியணிந்து பாடசாலை நுழைவாயில் அமைதியாக ஒன்றுகூடி தமது கவனயீர்ப்பை வெளிப்படுத்தி, அன்றைய நாள் முழுவதும் கறுப்புப்பட்டியுடன் கடமையில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” எனத்தெரிவித்தார்.
No comments:
Post a Comment