யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல் மாநகர சபை எல்லைக்குள் நாட்டப்பட்ட கம்பங்கள் - பொலிஸில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 5, 2019

யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல் மாநகர சபை எல்லைக்குள் நாட்டப்பட்ட கம்பங்கள் - பொலிஸில் முறைப்பாடு

யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல் மாநகர சபை எல்லைக்குள் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளதாக மாநகர சபையினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் தனியார் கேபிள் இணைப்புக்களை வழங்கும் நிறுவனம் ஒன்றினால் கம்பங்கள் நாட்டப்பட்டிருந்தன. சபையின் அனுமதி பெறப்படாமல் மாநகர சபை எல்லைக்குள் எந்தவித கம்பங்களும் நாட்டப்பட முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந் நிலையில் மாநகர எல்லைக்குள் பல கம்பங்கள் நேற்று முன்தினம் நாட்டப்பட்டுள்ளன. சபையின் அனுமதி பெறப்படாமல் சபை எல்லைக்குள் இவ்வாறு கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பில் மாநகர சபையின் துணை முதல்வர் துரைராசா ஈசன் உள்ளிட்ட மாநகர அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சபையின் அனுமதி பெறப்படாமல் சபை எல்லைக்குள் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் மாநகர சபையினால் முறைப்பாடொன்றும் நேற்றுமுன்தினம் மதியம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையிலும் புதிது புதிதாக வேறு வேறு இடங்களில் கம்பங்கள் அமைக்கப்பட்டும் அந்த கம்பங்களூடாக கேபிள் இணைப்புக்கள் பொருத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்தப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்த மாநகர சபையின் துணை முதல்வர் ஈசன் உள்ளிட்ட அதிகாரிகள் சபையின் அனுமதி பெறப்படாமல் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதென்றும் அவ்வாறு அனுமதியில்லாமல் இதனை முன்னெடுப்பது யார் என்றும் கேட்டதுடன் இந்தப் பணிகளை நிறுத்துமாறு தாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

ஆயினும் அவர்கள் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்திருந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக மீளவும் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணப் பொலிஸாரும் மாநகர சபை துணை முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளும் மாநகர சபை முன்பாக வருகை தந்த போதும் அதே பணிகளை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்திருந்ததை அவதானித்தனர்.

இதன் போது யார் இதனைச் செய்வது. ஏன் செய்கின்றீர்கள் என மாநகர சபை துணை முதல்வர் கேட்ட நிலையில் பொலிஸாரும் இது தொடர்பில் ஆராய்ந்த போது அங்கு கம்பங்களை நிறுத்திக் கொண்டிருந்தவர்கள் அந்தச் செயற்பாட்டைக் கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாநகர சபையின் அனுமதியில்லாமல் கம்பங்கள் நாட்டப்படுவது தொடர்பில் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களையும் அங்கிருந்தவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இங்கு யாரும் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க வேண்டாம் என்றும் அவ்வாறு எடுத்தால் தாங்களும் படங்களை எடுப்போம் எனக் கூறி அங்கிருந்த ஊடகவியலாளர்களை படம் பிடித்ததுடன் தாங்கள் யார் என பின்னர் காட்டுவோம் எனக் கூறியும் அங்கிருந்த சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment