அஸ்லம் எஸ். மௌலானா
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கும் கல்முனை புதிய நகரத் திட்டத்திற்கும் விசேட நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனவ இதனை தேசிய முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து கவுன்சில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு மூன்று தசாப்தங்கள் கடந்துள்ளபோதிலும் இதுவரை அவர்களது மீள்குடியேற்றத்திற்கு பொருத்தமான பொறிமுறைத் திட்டத்தின் ஊடாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
நாட்டின் பிரதான தேசிய கட்சிகளும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மைத்திரி, ரணில் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்க காலத்தில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பெரும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. ஆனால் இவ்விடயத்தில் எவ்வித முன்நகர்வும் ஏற்படாத சூழ்நிலையில் அந்த அரசாங்கம் சூழ்ச்சிகரமாக கலைக்கப்பட்டதால் அகதி மக்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் குறுகிய காலத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறியாக இருந்து, பொறுப்புணர்வுடன் செயற்படும்போதே சவால்களை வெற்றி கொண்டு, வடக்கு முஸ்லிம்ளின் அகதி வாழ்வுக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அதேபோன்று அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்ற கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களின் ஒருங்கிணைந்த புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவும் சவால் நிறைந்த ஒரு பாரிய வேலைத் திட்டமாகும். ஏனெனில் இப்புத்திய நகரமயமாக்கல் திட்டத்திற்கு தமிழ் சமூகத்தின் இணக்கம் கிடைக்காமையினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப நகர்வுகள் தடைப்பட்டுப் போனமை கவலைக்குரிய விடயமாகும்.
ஆகையினால் இது விடயத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் கைகோர்த்துச் செயற்படும்போதே கல்முனையின் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான நகரமொன்றை உருவாக்கிக் கொடுக்க முடியும் என்ற இலக்குடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தேசிய முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இவ்விரு விடயங்களும் உள்ளடக்கப்பட்டமைக்காக அரசாங்கத்திற்கு தேசிய முஸ்லிம் கவுன்சில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment