நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருப்பதால், அதிலிருந்து மீள்வதற்கு சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார்.
உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதியில் பின்னடைவு, கடன் சுமை ஆகியவற்றால், நாடு பொருளாதார ரீதியாகப் பாரிய நெருக்கடியில் உள்ளதென்பதைப் புரிந்துகொண்டு சகலரும் பேதங்களை மறந்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக் காலை (06) நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களும் இரண்டரை மாதங்களுமாகிறது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்தக் காலப் பகுதியில் நிறைவேற்றுவதற்கு முயற்சித்தபோதிலும் சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தேர்தல் வருடமென்றும் அதற்கேற்றவாறு செயற்பட வேண்டியது சகல அரசியல் கட்சித் தலைவர்களினதும் பொறுப்பாகுமென்றும் வலியுறுத்தினார்.
இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. சிலவேளை, அதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல்கூட நடைபெறலாம்.
தற்போது ஸ்தீரமற்ற ஒரு பாராளுமன்றமே இருக்கிறது. எனவே, தனிப்பட்ட ரீதியில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்துக்கொண்டு அரசாங்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்த ஜனாதிபதி, தனிப்பட்ட கோரிக்கைகளை முன்வைப்பது பண்பற்ற செயலென்றும் சுட்டிக்காட்டினார்.
இது தேர்தல் வருடமென்பதால், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்கள் இருக்கும். என்றாலும் நாட்டை நேசிக்கும் சகல அரசியல் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாகச் செயற்படுவதே சிறந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வரவு, செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்போதெல்லாம், ஆளுந்தரப்பு ஆதரிப்பதும் எதிர்க் கட்சியினர் குறை சொல்வதும் வழமையான ஒன்று. ஒவ்வொரு வருடமும் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் சகலரையும் திருப்திப்படுத்தும் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க முடியாது.
அவ்வாறு விமர்சிப்பவர்கள், தனி நபராகவோ குழுவாகவோ நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு ஒரு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்துக் காட்டட்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், யதார்த்தபூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்றார்.
பொருளாதார நிலைவரத்தைத் தெரிந்திருப்பதால்தான் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அரச ஊழியர்களுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து வழங்க முன்மொழிந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்துவது கடினம்.
நான் வரவு செலவுத் திட்டத்தைப் பற்றிச் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
விசு கருணாநிதி
No comments:
Post a Comment